எல்பிஎல் இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாண கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
அவிஷ்க பெர்னாண்டோ 64 பந்துகளில் 100 ஓட்டங்கள் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 70 ஓட்டங்கள் விளாச, தம்புள்ள ஜெயன்ட்ஸ் அணியை 23 ஓட்டங்களால் யாழ் அணி வீழ்த்தியது.
லங்கா பிரீமியர் லீக் 2வது அரையிறுதி போட்டி நேற்று இடம்பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணி, யாழ்ப்பாண கிங்ஸ் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
யாழ்ப்பாண அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரஹ்மானுல்லா குர்பாஸ், அவிஷ்க பெர்னாண்டோ அபாரமான தொடக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 122 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) 40 பந்துகளில் 70 ஓட்டங்கள் விளாசினார். அவிஷ்க பெர்னாண்டோ 64 பந்துகளில், 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களை பெற்றார். இந்த எல்பிஎல் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.
யாழ்ப்பாணம் 4 விக்கெட் இழப்பிற்கு 210ஓட்டங்களை குவித்தது.
பந்துவீச்சில் லஹிரு சமரகோன் 30 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்கள், மெர்ச்சன்ட் டி லாங் 47ஓட்டங்களிற்கு 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
பதிலளித்து ஆடிய தம்புள்ளை ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை பெற்றது. சாமிக்க கருணாரத்ன 75, பில் சால்ட் 22, நிரோஷன் டிக்வெல்ல 18 ஓட்டங்களை பெற்றனர்.
ஜேடன் சீல்ஸ் 24 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்கள், மகேஷ் தீக்ஷனா 23 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்கள், திசர பெரேரா 50 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டக்களை கைப்பற்றினர்.
யாழ் கிங்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் அவிஷ்க பெர்னாண்டோ.
கடந்த எல்பிஎல் இறுதிப் போட்டியில் யாழ் கிங்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இம்முறையும் இந்த அணிகளே இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.