வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டுக்கு வழமையாக வேலைக்கு செல்லும் தகப்பனும் மகளுமே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் போது உணவு உண்டுகொண்டிருக்கும்போது திடீரென குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் மீது கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளதுடன் கழுத்தை வெட்டிய பின் தாலிக்கொடியை அறுத்தெடுத்துள்ளனர். தோடுகளை கழற்ற முடியாமல், காதுகளை வெட்டி எடுத்துச்சென்றுள்ளமையும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறித்த பெண்ணை கொலை செய்த இருவரும் அங்கிருந்த தங்க நகைகளை களவாடிச் சென்ற நிலையில் வீதியில் நின்றவர்கள் அவர்களின் உடைகளில் இரத்தக்கறை உள்ளதை கண்டு சந்தேகம் கொண்டு துரத்திச்சென்று இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேற்படி கொலை சம்பவத்தின்போது 50 வயதுடைய தயாவதி செல்வராஜா என்னும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட தடவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
-பா.டிலான்-