இலங்கை மின்சாரசபையின் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தில் இரும்பு திருடப்பட்ட விவகாரத்தில் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட இராணுவச்சிப்பாய் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மின்சாரசபையின் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தில் (உத்துரு ஜனனி) பழைய இரும்புகள் களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அந்த இரும்புகள் காணாமல் போயுள்ளதாக, முகாமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 17ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், இரும்பு திருட்டுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இராணுவச்சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அண்மையில் இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு எச்சரிக்கையையடுத்து, நாடளாவிய ரீதியில் மின் மாற்றிகள் உள்ளிட்ட மின் கட்டமைப்புக்களிற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சிப்பாய் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 27ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.