முல்லைத்தீவு மாவட்டத்தின், மூங்கிலாறு வடக்கில் நேற்று (18) சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுமிக்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பின் போதே உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.
சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் காணப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிக குருதிப் பெருக்கே மரணத்திற்கு காரணம் என தெரிய வருகிறது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு 200 வீட்டு திட்டம் பகுதியில் கடந்த (15) புதன் கிழமை 12 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
யோகராசா நிதர்சனா என்ற 12 வயது சிறுமியே காணாமல் போயிருந்தார்.
இதையடுத்து, கிராம மக்கள், பொலிசார், இராணுவத்தினர் தேடுதல் நடத்தினார்கள். பலன் கிட்டவில்லை.
இந்த நிலையில் நேற்று (18) சிறுமி சடலமாக மீட்கபட்டிருந்தார்.
ஆடைகள் கலைந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள கைவிடப்பட்டுள்ள வளவு ஒன்றில் சடலம் காணப்பட்டது.
சடலம் மீட்க பட்டிருந்த இடத்தில் தடயவியல் பொலிஸார் மற்றும் மோப்ப நாய் கொண்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி முல்லைத்தீவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரும் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
உயிரிழந்த நிதர்சனா, திருகோணமலையில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தவர். கடந்த 7ஆம் மாதம் மூங்கிலாற்றிற்கு வந்திருந்தார். மீண்டும் ஜனவரியில் திருகோணமலைக்கு கல்வி நடவடிக்கைக்கு செல்வதாக இருந்தது.
சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள்.
சிறுமியின் சடலம் தற்போது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.