கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அரசியல் செல்வாக்கு தனக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஏற்கெனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவரை டெல்லி போலீஸார் கடந்த 2017இல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர்.
அவர் மீது 21க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக டெல்லி அமலாக்கத் துறையினர் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தொழிலதிபர் மனைவியிடம் பண மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 பேர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுடன் நட்பு ஏற்பட மத்திய அமைச்சர் அமித்ஷாவின் போன் நம்பரை தவறாக பயன்படுத்தி உள்ளார். நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் மினி ஹெலிகாப்டர், சொகுசு ரக பார்ஷே கார், ரோலக்ஸ் கடிகாரம் என பல கோடி மதிப்பிலான பரிசுகளை வழங்கியுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் இருக்கும் அவரது சகோதரிக்கு கடனாக பணம் அளித்துள்ளார். மேலும் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் சுகேஷ் சந்திரசேகர் கூறி இருந்தார்.
இதேவேளை, ஜாக்குலின் வழங்கிய வாக்குமூலத்தில்-
ஆரம்பத்தில், ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் “சேகர் ரத்னா வேலா” என்று தன்னை அறிமுகப்படுத்தினார்.
முதலில் டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 இல் ஜாக்குலினை தொடர்பு கொள்ள முயன்றார், ஆனால் அவர் யார் என்று தெரியாததால் அவரது அழைப்புகளுக்கு ஜாக்குலின் பதிலளிக்கவில்லை. பின்னர் அவரது ஒப்பனை கலைஞரான ஷான் முத்தத்தில் மூலம் சுகேஷ் சந்திரசேகர் தொடர்பு கொண்டார்.
ஒப்பனை கலைஞருக்கு அரசாங்க அதிகாரி என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது, அவர் நடிகர் சேகர் ரத்ன வேலாவை ‘மிக முக்கியமான நபராக’ தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சுகேஷ் சந்திரசேகர் தனக்கு BMW X5 கார், மினி ஹெலிகொப்டர், இரண்டு ஜோடி வைர காதணிகள் உள்ளிட்ட 15 ஜோடி காதணிகள், இரண்டு ஹெர்ம்ஸ் வளையல்கள் உள்ளிட்ட பல வளையல்கள் மற்றும் மோதிரங்கள், ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் மற்றும் ஒரு ஜோடி லூயிஸ் உய்ட்டன் ஷூக்களை கொடுத்ததாக கூறினார்.
சுகேஷ் சந்திரசேகர், ஏஜென்சிக்கு அளித்த வாக்குமூலத்தில், ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொடுத்ததாகக் கூறினார். ‘எஸ்புவேலா’ என்ற குதிரையையும் பரிசாகக் கொடுத்தார்.
மேலும், சுகேஷ் சந்திரசேகர், அமெரிக்காவில் வசிக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் சகோதரிக்கு 150,000 அமெரிக்க டொலர் கடனாக வழங்கியுள்ளார்.
ஜாக்குலின் பெர்னாண்டஸின் பெற்றோருக்கு மஸராட்டி மற்றும் பஹ்ரைனில் உள்ள அவரது தாயாருக்கு போர்ஷை கார் பரிசாக அளித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரருக்கு 50,000 அமெரிக்க டொலர் கடனாகவும் வழங்கினார்.
சுகேஷ் சந்திரசேகர் தன்னை சன் டிவியின் உரிமையாளர் என்று அறிமுகப்படுத்தியதாகக் கூறினார். மேலும், தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் ‘அரசியல் குடும்பத்தில்’ தானும் ஒரு அங்கம் என்றும் அவர் கூறினார்.
தான் ஒரு பெரிய ரசிகன் என்றும், தமிழ் சினிமாவில் தான் எடுக்கவுள்ள பல படங்களில் ஜாக்குலின் நடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆடம்பர பிராண்டுகளின் ஷோரூம்களுக்குச் சென்று பொருட்களை பார்த்து இந்த பொருட்களின் பட்டியலை ஜாக்கலின், சுகேஷ் சந்திரசேகருக்கு அனுப்புவார், அவர் அவற்றைப் பணம் செலுத்தி நேரடியாகவோ அல்லது அவரது உதவியாளர் மூலமாகவோ ஜாக்குலினிடம் சேர்ப்பிப்பார் என கூறியுள்ளார்.