தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரம்போசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால், இலேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தென்னாபிரிக்காவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் 17,154 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரேநாளில் 37,875 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு அரசு தெரவித்துள்ளது.
தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகத்துக்கான அமைச்சர் மாண்டில் குங்குபெலே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
‘ஜனாதிபதி சிரில் ரம்போசாவுக்கு இலேசான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே ஜனாதிபதி இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால், இலேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன.
அவருக்கு தென்னாபிரிக்க இராணுவ சுகாதார மைய மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள். கேப்டவுன் நகரில் உள்ள இல்லத்தில் ஜனாதிபதி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ஜனாதிபதி நல்ல உடல்நலத்துடன் இயல்பாகவே உள்ளார். அடுத்த ஒரு வாரத்துக்கு அலுவலகப் பணிகளை துணை ஜனாதிபதி டேவிட் மபூசா கவனிப்பார்.
கடந்த வாரம் ஜனாதிபதி ரம்போசா உள்ளிட்ட தென்னாபிரிக்க பிரதிநிதிகள் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். அங்கிருந்து வந்த பின்புதான் ஜனாதிபதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆனால், ஜனாதிபதியுடன் சென்ற மற்ற பிரதிநிதிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என மக்களுக்கு ஜனாதிபதி ரம்போசா அறிவுறுத்தியுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.