25.9 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

21ஆம் திகதி மீண்டும் தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றுகூட தீர்மானம்: கடிதமும் இறுதி செய்யப்படும்!

தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பில் சந்தித்து பேசுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே, கூட்டு தீர்மானமொன்றில் கையெழுத்திடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இன்று (12) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஒழுங்கமைப்பில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், முதன்முறையாக நவம்பர் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் முழுமையாக நிறைவேறும் வரை – சமஷ்டி அடிப்படையிலான அதிகார பரவலாக்கல் அமுலாகும்வரை- அதன் முதல்படியாக, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட வலுவான உடன்படிக்கையான இந்திய – இலங்கை உடன்படிக்கையில் வாக்களித்ததன்படி, 13, 16வது திருத்தங்களை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும், அடுத்த படிமுறையாக சமஷ்டி அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை கோருவதே இந்த கூட்டு முயற்சியின் நோக்கம்.

விசேடமாக, அனைத்து தமிழ் தரப்பும் ஒன்றுபட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம்  இந்த கோரிக்கையை முன்வைப்பதென்றும், இதற்காக தமிழக முதல்வர், இந்திய பிரதமரை சந்திப்பதென்றும் திட்டமிட்டு, இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பம்பலப்பிட்டி, குளக் டவர் ஹொட்டலில் நடந்த இன்றைய கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், புளொட்டை பிரதிநிதித்துவப்படுத்தி ஆர்.இராகவன், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ பிரதிநிதித்துவப்படுத்தி க.சர்வேஸ்வரன் கலந்து கொண்டனர்.

இன்றைய சந்திப்பின் முடிவில் அனைத்து கட்சிகளும் கையெழுத்திடுவதற்கான ஆவணம் ஒன்றையும் ரெலோ சார்பில் தயாரித்து முன்வைத்திருந்தது.

இந்த ஆவணத்தில் உடனடியாக கையெழுத்திட முடியாது, 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்த கோருவது விசப்பரீட்சையாக அமைந்து விடும், சமஷ்டிஅடிப்படையிலான தீர்வை எதிர்நேக்கியிருக்கும் போது, 13ஐ கோர முடியாது, ஆவணத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டுமென இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

எனினும், கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் சம்பந்தனின் குழப்பத்தை தீர்த்தனர். 13தான் தமிழர்களின் நிரந்தர தீர்வு, அதை அமுல்ப்படுத்துங்கள் என கோரவில்லை. ஒரு இடைக்கால ஏற்பாடாகவே 13, 16வது திருத்தங்களை அமுல்ப்படுத்த கோருகிறோம். சமஷ்டி அடிப்படையிலான நிரந்தர தீர்வை பெறுவதற்கு முன்பான இடைக்கால ஏற்பாடாகவே இது கோரப்படுகிறது. நிரந்தர தீர்வு இதோ வருகிறது, அதோ வருகிறது, தைப்பொங்கலிற்கு வருகிறது, தீபாவளிக்கு வருகிறது என மக்களையும் ஏமாற்றி, எம்மை நாமே திருப்திப்படுத்திக் கொண்டிருக்க, காணி மற்றும் எஞ்சியிருக்கும் அதிகாரங்கள் பறிபோய்க்கொண்டிருக்கிறது.

அவற்றை தடுத்து நிறுத்த இடைக்கால ஏற்பாடு தேவை. விடுதலைப் புலிகள் கூட, அரசியல் தீர்வின் முன் இடைக்கால நிர்வாக ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ள ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் தயாராக இருந்தனர். மிகப்பலம் பொருந்திய நிலையிலேயே அவர்கள் அதற்கு தயாராக இருந்தார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவுடனும், கோட்டாபயவுடனும் இரகசியமாக சந்தித்து கதைத்து விட்டு, அவர்கள் சொன்னார்கள் என்பதற்காக, தைப்பொங்கல், தீபாவளியென இலவுகாத்த கிளியை போல இருக்க முடியாதென சம்பந்தனிற்கு சுட்டிக்காட்டப்பட்டது.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்திக் கொண்டு, 13வது திருத்தத்தை கோரும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென விக்னேஸ்வரன் தெரிவித்தார். எனினும், நிரந்தர தீர்விற்கு முன்னதாக இடைக்கால ஏற்பாடாக அதை ஏற்கலாம், அதற்கு முன்னதாக கடிதத்தில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தமது திருத்தங்களை 21ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிப்பதென்றும், 21ஆம் திகதி மீண்டும் கூடி, திருத்தங்களை இறுதி செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment