அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது சமையல் திறன் குறித்து, நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். தனக்கு தண்ணீர் கொதிக்க வைக்க மட்டுமே தெரியுமென, தனது மகள் கிண்டலடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
NBC தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை பின்னிரவு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் முதல்முறையாகக் கலந்துகொண்டு, இதனை தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் தாமும் தமது மனைவியும் சொந்தமாகக் காலை உணவைத் தயாரிப்பதாகத் பைடன் நிகழ்ச்சியின் படைப்பாளரான ஜிம்மி ஃபேல்லனிடம் கூறினார்.
ஆச்சரியத்தில், “நீங்கள் சொந்தமாக முட்டை சமைத்துக்கொள்வீர்களா?” என்று ஃபேல்லன் கேட்டார்.
“நான் சமைக்கமாட்டேன், எனது மனைவி ஜில் சமைப்பார்” என்று புன்னகையுடன் பைடன் பதிலளித்தார்.
தனது மகள் முன்னர் ஒருமுறை கூறியதை பைடன் நினைவுகூர்ந்தார். ‘அப்பாவிற்கு அதிகம் சமைக்க தெரியாது. அவருக்கு தண்ணீரைக் கொதிக்க வைக்கத்தான் தெரியும்’ என மகள் நகைச்சுவையாக கூறினாராம்.
வழக்கமான செய்தி மாநாடுகள் அல்லது நேர்காணல்களுக்காக நிருபர்களைச் சந்திப்பதில்லையென்ற விமர்சனங்களை எதிர்கொண்ட பிடனுக்கு இது ஒரு அரிய நேர்காணலாகும்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பதவியில் இருந்த இறுதி ஆண்டில் 35 தனி செய்தி மாநாடுகள் மற்றும் ஒரு கூட்டு நிகழ்வை நடத்தியிருந்தார். பிடென் பதவியேற்றதிலிருந்து ஆறு தனி மற்றும் மூன்று கூட்டு செய்தி மாநாடுகளை மட்டுமே நடத்தியுள்ளார்.
இந்நிலையில், அவர் கலந்துகொண்ட அந்த நேர்காணல் மிகவும் அரிதான ஒன்று எனக் கூறப்படுகிறது.
தொற்றுநோய் மற்றும் பணவீக்கம் குறித்த அமெரிக்கர்களின் கவலையை நிவர்த்தி செய்வது தனது வேலை என்று அவர் கூறினார். அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் கோவிட் மற்றும் பணவீக்கம் இரண்டும் “கட்டுப்பாட்டில் இருக்கும்” என்று தான் நம்புவதாக பைடன் கூறினார். மேலும் தடுப்பூசி பெறாத மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க தங்கள் பங்கைச் செய்யுமாறு வலியுறுத்தினார்.