யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தத்தை அரசாங்கம் மறைக்க முற்பட்டிருந்தால் அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்காது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வீரவன்ச, இந்த உடன்படிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் இன்னும் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.
New Fortress நிறுவனத்திற்கு பதிலாக வேறொரு நிறுவனம் ஒப்பந்தத்தை கையகப்படுத்துவதாக வெளியான செய்திகள் தொடர்பில் கூட்டத்தில் பல பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
அவர்களின் கவலைகள் எழுத்து மூலம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விவாதம் முடிவடையவில்லை என்றும் அவர் கூறினார்.
நாடு தற்போது பல பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்த மந்தநிலையில் இருந்து வெளிவருவதற்கு உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் தற்போதைய நிலைமையை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கம் உண்மையை மக்களிடம் இருந்து மறைத்து தற்போதைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள எதிர்பார்த்தால் அது வெறும் கட்டுக்கதை என அமைச்சர் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் செலவினங்களைச் சமாளிக்க போதுமான டொலர் கையிருப்பு நாட்டில் இல்லை என்று அவர் கூறினார், இதன் விளைவாக பொருளாதார நிலைமை தீவிரமடைந்துள்ளது, மேலும் COVID-19 கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எவ்வாறாயினும், நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதாகக் கூறுவதைத் தவிர்த்துள்ள அமைச்சர் வீரவன்ச, நாடு தற்போது பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.