27 C
Jaffna
January 8, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

பிரியந்த குமாரவின் உடல் இன்று இலங்கை வரும்: கொலைச்சூத்திரதாரிகளிற்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்!

இலங்கையைச் சேர்ந்த 49 வயதான தொழிற்சாலை மேலாளர் பிரியந்த குமாரவை மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் படுகொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் மேலும் ஆறு பேரை பஞ்சாப் போலீசார் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் கண்டு கைது செய்தனர். இதன்மூலம் கைதானவர்களின் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் சியால்கோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை, நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அடங்கிய கும்பல், தொழிற்சாலையின் மேலாளராக இருந்த பிரியந்த குமாரவை சித்திரவதை செய்து, பின்னர் அவரது உடலை எரித்தனர்.

உகோகி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) Armaghan Maqt இன் விண்ணப்பத்தின் பேரில் பாகிஸ்தான் தண்டனைச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் 7 மற்றும் 11WW இன்  302, 297, 201, 427, 431, 157, 149 ஆகிய பிரிவுகளின் கீழ்,  ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸின் 900 தொழிலாளர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டது. –

பொலிஸ் அதிகாரி Armaghan Maqt இன் முன்னிலையில், கலவரக்காரர்கள் பிரியந்த குமாரவை அறைந்து, உதைத்து, குத்தி, தடிகளால் தாக்கி, வசிராபாத் சாலையில் உள்ள தொழிற்சாலைக்கு வெளியே இழுத்துச் சென்றதாக குறிப்பிட்டார். பின்னர் உடலை தீ வைத்து கொளுத்தினர். போதுமான பொலிசார் இல்லாததால் அந்த சூழலில் எதையும் செய்ய முடியவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ருவிற்றரில் பகிரப்பட்ட புதுப்பிப்பின் படி, கடந்த இரண்டு நாட்களில், போலீசார் 241 பேரைக் கைது செய்தனர், அதில் மேலும் ஆறு முதன்மை சந்தேக நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் மொபைல் போன் தரவுகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். “சந்தேக நபர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பதுங்கியிருந்தனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில், 19 பேர் கொடூரமான கொலையில் “முதன்மைப் பங்கு” வகித்ததாக காவல்துறை மேலும் கூறியது.

வன்முறையைத் தூண்டியவர்களைக் கண்டறியும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்டார் மற்றும் ஐஜி ராவ் சர்தார் அலி கான் ஆகியோர் முழு விசாரணை செயல்முறையையும் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகின்றனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட காவல்துறை அதிகாரி (டிபிஓ) உமர் சயீத் மாலிக் கூறுகையில், மேலும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான சோதனைகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குமார கொலையை நியாயப்படுத்தி சமூக ஊடகங்களில் “ஆத்திரமூட்டும்” வீடியோவை பதிவேற்றிய ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்றார்.

இதேவேளை, பிரதான சந்தேகநபர்கள் 13 பேர் குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் ஒரு நாள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ஃபர்ஹான் இத்ரீஸ், சபூர் பட், தல்ஹா, அப்துல் ரஹ்மான், இம்ரான், தைமூர், சோயிப், ரஹீல், உஸ்மான், ஷாஜாய்ப், நசீர், எஹ்திஷாம் மற்றும் ஜுனைத் என அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் பலத்த பாதுகாப்புடன் நீதிபதி ஜரீப் அகமது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றவாளிகள் இன்று குஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் சனிக்கிழமையன்று மூடப்பட்டுள்ளது. கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க அதன் ஊழியர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

இதற்கிடையில், மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. மதவெறிக் கும்பலிடமிருந்து பிரியந்த குமாரவை காப்பாற்ற முயலும் சக ஊழியர் ஒருவர், கும்பலைச் சமாதானப்படுத்த முயற்சிக்கும் காட்சிகள் அதில் உள்ளன..

அந்த வீடியோவில், பிரியந்தகுமார ஒரு முஸ்லிம் அல்லாதவர் என்றும், “சுவரொட்டியில் என்ன எழுதியிருந்தது என்று தெரியவில்லை” என்றும் அந்த ஊழியர், மதவெறிக் கும்பலிடம் கூறுவதைக் கேட்கலாம். குமாரவை தொழிற்சாலையில் இருந்து அகற்றிவிட்டு எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்றும் கும்பலுக்கு அவர் உறுதியளிக்க முயன்றார்.

இருப்பினும், கூட்டம் அவரது வேண்டுகோளை கேட்க மறுத்தது. கொலைக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் அந்த ஊழியர் குமாரவை தொழிற்சாலையின் கூரையில் பாதுகாக்க முயற்சிப்பதைக் காட்டியது.

வீடியோவில், கும்பலில் சிலர் கோஷம் எழுப்புவதையும், “அவர் (மேனேஜர்) இன்று தப்பிக்க மாட்டார்” என்று கூறுவதையும் கேட்கலாம், அதே நேரத்தில் சக ஊழியர் குமாரவை அவரது உடலால் பாதுகாக்க முயன்றார். தனது கால்களிற்கிடையில் குமாரவை வைத்துக் கொண்டு, தாக்குதலில் இருந்து காப்பாற்ற முன்றார்.

சுமார் இருபது வரையான கும்பல் அந்த ஊழியரை தாக்கி, பிரியந்தவை வீதிக்கு இழுத்துச் சென்று உதைகள், கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளால் சித்திரவதை செய்து, அந்த இடத்திலேயே அவரைக் கொன்றனர். பின்னர் அந்த கும்பல் உடலை தீ வைத்து எரித்தனர்.

அடையாளம் தெரியாத போலீஸ் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஜியோ டிவி மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

தொழிற்சாலையில் ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் மேலாளர் பிரியந்த கடுமையாக நடந்து கொள்வதை, சில தொழிற்சாலை ஊழியர்கள் விரும்பவில்லை என்று கூறியது. வெள்ளிக்கிழமை காலை வழக்கமான ஆய்வுக்குப் பிறகு, மோசமான வேலைக்காக சுகாதார ஊழியர்களை பிரியந்த கடுமையாக பேசியுள்ளார். . தொழிற்சாலை வெள்ளையடிக்கப்படவிருந்ததால், மேலாளர் சுவரில் இருந்து சுவரொட்டிகளை அகற்றத் தொடங்கினார் என்று ஜியோ டிவி மேலும் தெரிவித்துள்ளது. அந்த சுவரொட்டிகளில் ஒன்று மதம் சார்ந்த விவாதத்திற்கான அழைப்பாக இருந்ததால், சில தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குமார மன்னிப்புக் கேட்டதாகவும், ஆனால் ஒரு மேற்பார்வையாளர் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டதாகவும், அவர்கள் அவரைத் தாக்கியதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆத்திரமடைந்த கும்பலிடமிருந்து தப்பிக்க, பிரியந்தகுமார கூரைக்கு ஓடி சோலார் பனல்களுக்கு அடியில் ஒளிந்து கொள்ள முயன்றார், ஆனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அவரைப் பிடித்து அடித்து, வீதிக்கு இழுத்துச் சென்றது. பின்னர் கொன்றனர்.

சியால்கோட்டில் உள்ள அல்லாமா இக்பால் போதனா மருத்துவமனையில் குமாரவின் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்தது, அதன்படி அவர் அனுபவித்த சித்திரவதையால் அவரது உடலின் பெரும்பகுதி எரிந்து பல எலும்புகள் உடைந்தன என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரது உடல் ஆம்புலன்சில் லாகூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பிரதாயங்களை நிறைவேற்றிய பின்னர் இன்று இலங்கைக்கு எடுத்து வரப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

Leave a Comment