யுத்த காலத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை மீட்க முயன்றதாக கூறப்படும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் ஒருங்கிணைப்பு செயலாளர்கள் இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளர்களே இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கமைய புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கம் ஒன்று நவம்பர் 25ஆம் திகதி மீட்கப்படவிருந்தது.
எனினும், அகழ்வு பணிகள் நாளை (02) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும், இருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரியை சந்தித்து, தங்கத்தை தோண்டியெடுக்க விரும்புவதை தெரிவித்ததாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தமது அமைச்சின் அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த சட்ட அமலாக்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியாது எனவும், தமது அமைச்சின் உறுப்பினர்கள் எவரேனும் இவ்வாறான செயலில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு தனது அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.




