முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை மீட்க முயற்சித்த இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் செயலாளர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தை இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் பணியகச் செயலாளர்கள் இருவர் சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், செயலாளர்கள் இருவரின் சட்ட விரோதமான நடவடிக்கைகள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




