நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அர்ஜுன் மீது அளித்த பாலியல் புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அர்ஜுன். இவரின் நடிப்பில் வெளியான நிபுணன் படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை, அர்ஜுன் மீது பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனது முகநூல் பக்கத்தில், விஸ்மயா (தமிழில் நிபுணன்) படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தபோது, நானும் அவரும் நெருங்கி நடிக்க வேண்டிய காட்சி ஒன்று இருந்தது. அந்தக் காட்சியை படமாக்குவதற்கு முன்பாக, படப்பிடிப்புத் தளத்தில் அனைவரது முன்னிலையிலும், அர்ஜுன் எனது அனுமதியின்றி என்னிடம் நெருக்கமாக வந்து என்னைத் தொட்டார். அது எனக்கு கோபத்தை உண்டாக்கியது என்று பதிவிட்டு இருந்தார்.
பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அர்ஜுனும், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது போலீசில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் அர்ஜுனின் சார்பாக அவரது உறவினரும் மறைந்த கன்னட நடிகருமான சார்ஜா பெங்களூர் சிவில் நிதிமன்றத்தில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு வழக்கு தொடந்தார். மேலும் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகார் அடிப்படை இல்லாதது என்று பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் இறுதி அறிக்கையை நேற்று முன்தினம் கப்பன் பார்க் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், நடிகர் அர்ஜுன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி இவ்வழக்கிலிருந்து அர்ஜுன் விடுவிக்கப்பட்டுள்ளார்.