2021ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி தொடர்பான ராசி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
இந்த பிலவ வருஷம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 4ஆம் திகதி (20.11.2021) சனிக்கிழமை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவிதியை திதி, கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி 44 நாழிகை அளவில் இரவு 11.28 மணிக்கு சூரிய பகவானின் ஹோரையில், அவிட்டம் நட்சத்திரம் 2ஆம் பாதத்திலிருந்து அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் பாதத்திற்கு அதாவது “பிரகஸ்பதி’ என்கிற தேவர்களுக்கு ஆசானாகிய குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சியானார்.
குரு பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கான பலன்கள்
குரு பெயர்ச்சி: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளுக்கான பலன்கள்
தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளுக்கான குரு பெயர்ச்சிப் பலன்களைப் பார்க்கலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து செயல்களையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்களிலிருந்த தடை தாமதங்கள் நீங்கிவிடும். குடும்பத்திலும் வெளியிலும் தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். வண்டி வாகனங்களில் இருந்த பழுதுகளைச் சீர் செய்வீர்கள்.
பாகப்பிரிவினை தொடர்பாக நடந்து வந்த விஷயங்களில் இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலையை நோக்கிச் செல்லத் தொடங்கும். மனதில் இனம் புரியாத ஆசைகள் மற்றும் எண்ணங்கள் தோன்றும். இந்த சிந்தனைகள் உங்களை புதுவித பாதையில் இட்டுச் செல்வதைக் காண்பீர்கள்.
பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். வருமானத்தில் புதிய இலக்குகளை நோக்கி பயணிப்பீர்கள். கிடைத்தற்கரிய அரிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். படிக்கவும், வேலை செய்யவும் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்கள். செய்தொழிலில் சிறிய மாற்றங்களைச் செய்து புதிய வருமானம் வரும் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.
பழைய காலத்திலிருந்த பொருளாதார நெருக்கடிகள் மறையும். தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் உடன்பிறந்தோரின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவீர்கள்.
நேர்முக, மறைமுக எதிரிகள் விலகி ஓடுவார்கள். தனிக்காட்டு ராஜாவாக உங்கள் பாதையில் பயணப்படுவீர்கள். செய் தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து அனைவரும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உடன்பிறந்தோரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். அதேநேரம் உங்கள் ரகசியங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குடும்பத்துடன் பொழுதுபோக்கு சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். முக்கியமான விஷயங்களில் பெரியோர்களிடம் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பீர்கள். அசையும், அசையா சொத்துக்கள் மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள். இறுக்கமான சூழ்நிலைகளை ஹாஸ்யமான பேச்சினால் சகஜமாக மாற்றி விடுவீர்கள். அரசு சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தியானம், பிரணாயாமம், யோகா போன்றவைகளைச் செய்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து, அவர்களின் மூலம் தேவையான ஆதரவைப் பெற்று, புதிய பொறுப்புகளை ஏற்று நடத்தும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துங்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணியிடமாற்றம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். சில நேரங்களில் கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். புதிய முதலீடுகளை நன்கு ஆலோசித்த பிறகே செய்யவும்.
விவசாயிகள் புதிய கழனிகளை வாங்குவீர்கள். நீர்ப்பாசனத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். மகசூல் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகள் வெற்றிகளைக் குறைவாகவும், தோல்விகளை அதிகமாகவும் சந்திக்க நேரிடும். ஆகவே உங்கள் திட்டங்களைப் பொறுமையாக இருந்து செயல்படுத்துங்கள். தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும்.
கலைத்துறையினர் எதிர்பார்த்த புகழும் பாராட்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிரச்னைகளை நிதானமாகக் கையாளுங்கள். புதிய ஒப்பந்தங்கள் மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் அளிக்கும்.
பெண்மணிகளுக்கு குழந்தைகளால் பெருமை கிட்டும். கணவரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். குடும்பத்தில் பொறுப்புடனும் நிதானத்துடனும் நடந்துகொண்டு அனைவரிடமும் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெளி விளையாட்டுகளில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டு கல்வியில் அதிக அக்கறை செலுத்துங்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறலாம்.
பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.
•••••••••
மகரம்
(உத்திராடம் 2ஆம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் முடிய)
20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய முயற்சிகளை செயல்படுத்துவதற்கு சாதகமான சூழல்கள் தென்படும். பணவரவு அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தின் மூலமும் வருவாய் வரத் தொடங்கும். பொருளாதாரம் மேன்மையாகவே இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். உங்கள் காரியங்களைப் பொறுப்புடனும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செய்து முடிப்பீர்கள்.
மனதில் இருந்த சோர்வுகள் அகன்று தன்னம்பிக்கை கூடத் தொடங்கும். நடக்காது என்று நினைத்திருந்த விஷயங்கள் அனைத்தும் மளமளவென்று நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடும். சரியான நேரத்தில் எழுந்து, சரியான நேரத்தில் ஓய்வெடுத்து, உடலாரோக்கியத்தைப் பராமரிப்பீர்கள். ஆகார விஷயங்களிலும் கவனத்துடன் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவீர்கள்.
குழந்தைகளையும் உடற்பயிற்சிகளைச் செய்யத் தூண்டுவீர்கள். பிள்ளைகளுக்கு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் யோகம் சிலருக்கு அமையும். உங்களின் சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். செய்தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். உங்கள் காரியங்களுக்கு நண்பர்களின் உதவிகள் தேடாமலேயே கிடைக்கும்.
மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகளையும் அறிந்து அதற்கேற்ப உங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். செய்தொழிலில் புதிய நுட்பங்களையும் கற்றுக் கொள்வீர்கள். சமூகத்தில் அதிகாரமுள்ள புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். இதனால் உங்கள் சொல்வாக்கு செல்வாக்காக மாறும்.
அதேநேரம், அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து விடுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்வீர்கள். அவர்களின் சிறிய குறைகளைப் பெரிது படுத்த மாட்டீர்கள். பெற்றோர்களின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் புதிய திருத்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். தோற்றத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் காணப்படும். வெளியூர் வெளிநாடுகளிலிருந்து மனதிற்கு உற்சாகம் தரக்கூடிய செய்திகள் வந்து, உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்யும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்களும் உண்டாகும்.
வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்கவேண்டாம். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். முயற்சிக்குத் தகுந்த லாபத்தை அடைவீர்கள்.
விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் உண்டாகும். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். நீர்ப் பாசனத்திற்காக எடுக்கும் முயற்சிகள் முழுமையான வெற்றியைப் பெறும். மகசூல் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் எதிர்ப்புகள் அதிகரிக்கும். உட்கட்சி பூசலில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வதே புத்திசாலித்தனம். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்களின் படைப்புகளைப் புதிய வடிவத்தில் உருவாக்குவீர்கள். சக கலைஞர்களிடம் நட்புடன் நடந்து கொண்டு புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.
பெண்மணிகள் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். புதிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டுகளிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களைக் கலந்தாலோசித்து படிக்கவும். யோகா, பிராணாயாமம், தியானம் ஆகியவற்றைத் தவறாது மேற்கொள்ளவும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.
•••••••••
கும்பம்
(அவிட்டம் 3ஆம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ஆம் பாதம் முடிய)
20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பொருளாதாரம் சீராகவே தொடரும். தேவைக்கேற்ற வருமானம் வந்து கொண்டிருப்பதால் எத்தகைய செலவுகளையும் ஈடுகட்டி விடுவீர்கள். பெற்றோருடன் இணக்கமான உறவு தொடரும். அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சமயோஜித புத்தியுடனும், புரிதலுடனும் நீங்கள் செய்யும் தொடர் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.
மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். செய்தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அவைகளை பொறுப்புடனும், நிதானத்துடனும், தெளிவுடனும் செய்து முடித்து நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். போட்டிகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள், குடும்பத்தினரால் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். எதிர்ப்புகளை எதிர்கொண்டு காரியங்களைச் செய்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.
அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். சமுதாயத்தில் உங்கள் நிலை மேன்மையாக காணப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தினால் ஏற்றமான / மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். அதேநேரம் அவசர முடிவுகள் என்று எதுவும் எடுக்கக்கூடாது.
இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். வண்டி வாகனம் மற்றும் நிலம், வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். உங்களின் பலம் பலவீனத்தை அறிந்து கொண்டு செயலாற்றுவீர்கள். கேளிக்கை, விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வம்பு வழக்குகளிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தோரும் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். உங்களின் தன்னம்பிக்கையை பலப்படுத்திக் கொள்வீர்கள். தயக்கத்துடன் செய்து வந்த காரியங்களை “ரிஸ்க்’ எடுத்து துணிந்து செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் மனம் ஆன்மிகத்தில் ஈடுபடும். குழந்தைகளையும் ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். குடும்பத்துடன் புண்ணிய திருத்தலங்களுக்கும் சென்று வழிபடும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டறிந்து விலக்கி விடுவீர்கள்.
வியாபாரிகளுக்கு ஆற்றல் அதிகரிக்கும். பயணங்களால் நன்மையும், பணவரவும் உண்டாகும். கூட்டாளிகளை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.
விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள். மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். நீர்ப்பாசன வசதிகளையும் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து பாராட்டுகள் கிடைக்கும். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் இருந்து நற்பெயர் எடுப்பீர்கள். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள்.
கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் மூலம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் அதிகரிப்பதால் மற்றவர்களுக்கும் உதவிகளைச் செய்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் அன்யோன்யமாக நடந்து கொள்வார்கள். கோபத்தை அறவே தவிர்க்க வேண்டும். குடும்பத்தினரிடம் அன்பைப் பொழியுங்கள். ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். காரியசித்தி கூடும்.
மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். உங்கள் முயற்சிகளுக்கு ஆசிரியரிடம் நல்ல பாராட்டுகள் கிடைக்கும். எதிலும் பதற்றத்தைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.
•••••••••
மீனம்
(பூரட்டாதி 4ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்கள் பன்மடங்கு லாபத்தைக் கொடுக்கும். செய்தொழிலை சிறப்பாக அபிவிருத்தி செய்வீர்கள். எப்படி நடக்குமோ என்று பயந்திருந்த காரியம், எந்த விதத் தடை தடங்கலுமின்றி சிறப்பாக நடந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். இத்தகைய செயல்களில் உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். புதியவர்களின் அறிவுரைகளையும் ஏற்று நடப்பீர்கள். ஆபத்துக்காலத்திலும் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். உங்கள் கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பெற்றோர்களுக்கு மருத்துவச் செலவுகள் என்று பெரிதாக எதுவும் ஏற்படாது. அதோடு பெற்றோருக்கும் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.
உங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்து நண்பர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மனவளம், உடல்நலம் போன்றவைகள் மேம்பட தியானம், யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். காலம் பொன் போன்றது என்கிற வழக்கின் படி உங்கள் செயல்களைத் திட்டமிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உங்களால் இயலக்கூடிய உதவிகளைச் செய்தாலும், வீண் வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு நிறைவேற்ற முடியாமல் சங்கடங்களில் மாட்டிக் கொள்ள வேண்டாம். ஆக்கபூர்வமாகச் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். உங்கள் பேச்சுக்கும் மதிப்பு கூடத் தொடங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். தவறாகிப் போய்விடாது என்று நிச்சயமாக தெரிந்தாலொழிய உங்கள் ஐடியாக்களை எவரிடமும் முன் வைக்காதீர்கள்.
தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணங்கள் நீண்டகால அடிப்படையில் பலன் தரத் தொடங்கும். உங்கள் செயல் திறன் வளரும். உங்கள் துறையிலுள்ள புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு அவைகளைச் செயல்படுத்துவீர்கள். பிரச்னைகளின் போது விரைவாகச் செயல்படுவது நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். ஆன்மிக சொற்பொழிவுகளுக்குச் சென்று உங்கள் ஆத்ம பலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். அதோடு, உங்களது இயல்பான நகைச்சுவையாற்றல் உங்களை சமூதாயத்தில் பிரபலமாக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர் வரும் இடையூறுகளைச் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களிடம் நட்புடன் நடந்துகொள்வார்கள். சிறு சிறு தொல்லைகள் கொடுத்துவந்த சக ஊழியர்கள் அடங்கி விடுவார்கள். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளை நியமித்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்றாகவே இருக்கும். புதிய சந்தைகளில் உங்கள் பொருள்கள் விற்பனையாகும்.
விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் குறைவாகவே கிடைக்கும். மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து லாபம் காண்பீர்கள். நீர்வரத்து அதிகரிப்பதால் உயர்ந்த பலனை அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். அதேசமயம் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும்.
கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் காண்பார்கள். உடலாரோக்கியம் சீர்படும். ஆன்மிக சுற்றுலா சென்று வர வாய்ப்புகள் உண்டாகும். மாணவமணிகள் மனச் சோர்வு அடையாமல் படிப்பில் கவனம் செலுத்தவும். யோகா, தியானம், பிரணாயாமம் போன்றவைகளில் ஈடுபட்டு வரவும். பெற்றோர்களால் உங்கள் கோரிக்கைகள் யாவும் நிறைவேறும்.
பரிகாரம்: ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.