தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பாவிற்குள் ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதை நீக்க வேண்டுமென குறிப்பிட்டு, தாக்கல் செய்த மேல்முறையீட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றம் கடந்த 24ஆம் திகதி நிராகரித்துள்ளது.
டென்மார்க்கை தளமாகக் கொண்ட விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய அரசியல் பிரிவான மனுதாரர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கின் அனைத்து செலவுகளையும் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2009 இல் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பத்து வருடங்களின் பின்னர், ஜனவரி 2019 இல் ஐரோப்பிய ஒன்றியம், புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டதை இரத்து செய்ய மனுதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டது.
2019 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தடையை நீட்டித்த போது, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத் தோல்விக்கு உள்ளாகியிருந்த போதிலும், “சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் புத்துயிர்ப்புத் திறன்கள்” உள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
இலங்கை அரசால் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, மக்கள் கடுமையான பாகுபாடுகளுக்கு ஆளாகியதாகவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகள் நியாயமான ஆயுத மோதலில் 2009 வரை பங்குகொண்டதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் நோக்கம், தற்போதைய சர்வதேச சட்டத்தின் நோக்கங்களின்படி, பயங்கரவாதத்தை எந்த வடிவத்தில் எடுத்தாலும் அதை எதிர்த்துப் போராடுவதே ஆகும் என்று நீதிமன்றம் கூறியது.
அத்துடன், குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் வலையமைப்பின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.