நேற்று முன்தினம் இடம் பெற்ற பருத்தித்துறை நகரசபையின் 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அமர்வில் கலந்து கொண்ட பருத்தித்துறை நகர சபை தவிசாளர், உறுப்பினர்கள், மற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் என 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொள்ள வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் சுகயீனமடைந்த நிலையில் காணப்பட்டார். அவர் மாடிப்படியேற சிரமப்பட்ட நிலையில், சக உறுப்பினர்கள் இருவர், அவரை கைத்தாங்கலாக மாடிக்கு அழைத்து வந்தனர்.
வாக்கெடுப்பின் பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமாகியிருந்தது.
இதையடுத்து, கதிரையொன்றில் அவரை உட்கார வைத்து, கீழே தூக்கி வந்து, வாகனமொன்றில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து, நேற்றைய தினமே பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால், தொற்றுக்குள்ளானவருடன் நெருங்கிய தொடர்புபட்ட 2 உறுப்பினர்களை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இன்று, பருத்தித்துறை நகரசபை தலைவர் மற்றும் 10 உறுப்பினர்கள், நகரசபை 3 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.