பூநகரி பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், இலங்கை தமிழ் அரசு கட்சியினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை வரிசையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள் முரண்பாட்டினால் மேலும் ஒரு சபையில் குழப்பமான நிலை தோன்றியுள்ளது.
பூநகரி பிரதேச சபையின் வரவு செலவு திட்ட அமர்வு, தவிசாளர் அருணாசலம் ஐயம்பிள்ளை தலைமையில், இன்று (23) காலை 10 மணிக்கு ஆரம்பமானது.
இதன்போது, 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது, ஆதரவாக 8 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
11 பேர் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்களில், தவிசாளர் தவிர்ந்த 10 பேரும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.
தவிசாளர் மற்றும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இருவரும், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரும், சமத்துவ மக்கள் கட்சியின் (சுயேட்சைக்குழு) உறுப்பினர்கள் நால்வரும், ஆதரவாக வாக்களித்தனர்.
ஈ.பி.டி.பியின் ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
2 மேலதிக வாக்குகளால் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
பூநகரி பிரதேசசபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்மைப்பினர், அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்று 11 ஆசனங்களுடன் ஆட்சி அமைத்தனர். எனினும், சிறிது காலத்தில் தவிசாளரை பதவி விலகுமாறு கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அழுத்தம் கொடுத்தார். அதற்கு தவிசாளர் மசியவில்லை.
இதனால் நீண்டகாலமாக பூநகரி பிரதேசசபையில் குழப்பம் ஏற்பட்டது. அண்மைக்காலமாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்கள் ஒவ்வொருவரும், பட்டியிலிருந்து திறந்துவிட்ட மாடுகளை போல, தனித்தனி முடிவெடுத்து சபைகளில் குழப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், பூநகரியிலும் அதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் தவிசாளரிடமிருந்து பதவிவிலகல் கடிதத்தை பெற்ற கிளி◌ாச்சி தமிழரசு கட்சியினர், அதை கட்சி மூலமாக தேர்தல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த கடிதம் தொடர்பாக, தவிசாளரின் அபிப்பிராயத்தை அறிய தெரிவத்தாட்சி அலுவலர் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த கடிதம் தனக்கு அழுத்தம் கொடுத்து பெறப்பட்டதாக தவிசாளர் குறிப்பிட்டதையடுத்து, அந்த பதவிவிலக்கல் முயற்சியும் வெற்றியடையவில்லை.
இதையடுத்து, சொந்த கட்சியின் வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து, தவிசாளர் மாற்றத்தை ஏற்படுத்த, கிளிநொச்சி தமிழ் அரசு கட்சியினர் முயற்சியில் இறங்கியுள்ளனர்.