சீன டென்னிஸ் நட்சத்திரம் பெங் ஷுவாய், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தலைவர் தோமஸ் பாக் உடன் வீடியோ அழைப்பை மேற்கொண்டுள்ளார். தான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக பெங் ஷுவாய் தெரிவித்ததாக ஐஓசி கூறியுள்ளது.
மாயமான சீன டென்னிஷ் நட்சத்திரத்தின் பாதுகாப்பு குறித்து, பல அரசாங்கங்கள் அவரது அக்கறை தெரிவித்ததை அடுத்து. இந்த புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.அத்துடன், அவர் பாதுகாப்பாக இருப்பதாக காண்பித்து சீனாவும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் (35). கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 2 முறை சம்பியன் பட்டம் வென்றவரான இவர், அண்மையில் அந்த நாட்டின் முன்னாள் துணை பிரதமரும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜாங் கோலி மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்.
நவம்பர் 2ஆம் திகதி அவர் சீன சமூக ஊடகங்களில் வெளியிட்ட தகவலில், ஜாங் தன்னை உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், பின்னர் அவர்கள் ஒருமித்த உறவில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஜாங் 2018 வரை கட்சியின் ஆளும் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார்.
சமூக வலைத்தளம் மூலம் இந்த குற்றச்சாட்டை வெளியிட்ட நாள் முதல் பெங் சூவாய் மாயமானார். அவரின் கதி என்ன? என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. அவர் மாயமானதன் பின்னணியில் ஜனாதிபதி ஜின்பிங் தலைமையிலான அரசுக்கு பங்கு இருக்கலாம் என்கிற சந்தேகம் நிலவுவதால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இதனிடையே பெங் சூவாயின் பாதுகாப்பு மற்றும் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து உண்மையான ஆதாரங்களை அளிக்குமாறு சீனாவை ஐ.நா.வும், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. இது சீன அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஐஓசி விளையாட்டு வீரர்கள் ஆணையத்தில் இருந்து பின்லாந்தைச் சேர்ந்த எம்மா டெர்ஹோ மற்றும் சீன ஐஓசி உறுப்பினர் லி லிங்வேயும், பெங் ஷுவாய் உடன் 30 நிமிட வீடியோ அழைப்பில் பேசினர்.
“பெங் ஷுவாய் நன்றாக இருப்பதைக் கண்டு நான் நிம்மதியடைந்தேன், இது எங்கள் முக்கிய கவலையாக இருந்தது. அவள் நிம்மதியாகத் தோன்றினார். நான் அவருக்கு எங்கள் ஆதரவை வழங்கினேன், அவருடைய வசதிக்காக எந்த நேரத்திலும் தொடர்பில் இருக்க வேண்டும் என்றேன்” என்று டெர்ஹோ ஒரு அறிக்கையில் கூறினார்.
இதேவேளை பெங் ஷுவாய் பாதுகாப்பாக இருப்பதை காட்டும் வீடியோ ஒன்றை சீன அரசு ஊடகம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. சீன நேரப்படி நேற்று காலை தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற டீனேஜர் டென்னிஸ் போட்டியின் தொடக்க விழாவில் பெங் ஷுவாய் கலந்து கொண்டதாக கூறி அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இதுதவிர பெங் ஷுவாய் தன் நண்பர்களுடனும், பயிற்சியாளருடனும் வெளியே சென்று உணவு அருந்துவது போன்ற இரு வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய இந்த வீடியோக்கள் போதாது என பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தலைவர் ஸ்டீவ் சிமோன் கூறியுள்ளார்.
Peng Shuai showed up at the opening ceremony of a teenager tennis match final in Beijing on Sunday morning. Global Times photo reporter Cui Meng captured her at scene. pic.twitter.com/7wlBcTMgGy
— Hu Xijin 胡锡进 (@HuXijin_GT) November 21, 2021
இதேவேளை, முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பலரும் இந்த விடயத்தில் குரல் கொடுத்துள்ளனர். நவோமி ஒசாகா, செரீனா வில்லியம்ஸ் மற்றும் பில்லி ஜீன் கிங் உள்ளிட்ட தற்போதைய மற்றும் முன்னாள் டென்னிஸ் வீராங்கனைகள், #WhereIsPengShuai என்ற சமூக ஊடக ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும் அழைப்புகளில் இணைந்துள்ளனர்.
I am devastated and shocked to hear about the news of my peer, Peng Shuai. I hope she is safe and found as soon as possible. This must be investigated and we must not stay silent. Sending love to her and her family during this incredibly difficult time. #whereispengshuai pic.twitter.com/GZG3zLTSC6
— Serena Williams (@serenawilliams) November 18, 2021
பெங் ஷுவாய் விவகாரம் சீனாவிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பெங் ஷுவாய் விவகாரத்தை முன்னிறுத்தி, பெய்ஜிங்கில் நடைபெறவிருந்த குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளதால், சீனா அவசரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.