தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51வது படைத்தளம் தெரிவித்துள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51வது படைத்தளம் சிறப்புப் பிரிவினரினால் கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் கூறியுள்ளது.
மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான “கொல்பவன் வெல்வான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.