யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் அனுட்டிக்க பலருக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிசார் விடுத்த தடை கோரிக்கையை யாழ்ப்பாணம் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தடையுத்தரவு பிறப்பித்தது.
அதேநேரம், சுன்னாகம் பொலிசார் கோரி தடை கோரிக்கையை தொடர்பில் மல்லாகம் நீதிமன்றம் இதுவரை இறுதி உத்தரவு பிறப்பிக்கவில்லை. பொலிசாரால் குறிப்பிட்ட பிரதிவாதிகள் மூவரையும், எதிர்வரும் திங்கள்கிழமை மன்றில் முன்னிலையாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மாவீரர்நாள் அனுட்டிக்க ஏற்பாடு இடம்பெறுவதால், அந்த இடங்களில் நினைவேந்தலை நடத்த தடைகோரியும், 11 நபர்களிற்கு நினைவுநிகழ்வை நடத்த தடைகோரியும் பொலிசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
யாழ் மாநகரசபை மண்டபம், தியாகி திலீபன் நினைவிடம், யாழ் ஆயர் இல்லம் அருகில், தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகங்கள், வேலன் சுவாமியின் இல்லம் போன்ற இடங்களில் மாவீரர்நாள் அனுட்டிக்க திட்டமிட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
குறிப்பிட்ட இடங்களிலும், பொலிசார் குறிப்பிட்ட 11 பேரும் மாவீரர்நாள் அனுட்டிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், க.வி.விக்னேஸ்வரன், செ.கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சிறிகாந்தா, வி.மணிவண்ணன், ஈ.சரவணபவன், வ.பார்த்தீபன், சட்டத்தரணி சுகாஷ், அருட்தந்தை கனியூட் பாஸ்கரன் ஆகியோருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோப்பாய் பொலிசார் 14 பேருக்கு தடையுத்தரவு கோரியிருந்தனர்.
அதில், சுரேஷ் பிரேமச்சந்திரன், பொ.ஐங்கரநேசன் போன்றவர்கள் உள்ளடங்குகிறார்கள். யாழ் பல்கலைகழக சூழல், கோப்பாய் துயிலுமில்லம் அமைந்த இடத்தில் மாவீரர் நாள் அனுட்டிப்பு ஏற்பாடுகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவித்தனர்.
அத்துடன், சுன்னாகம் பொலிசார் 3 பேருக்கு எதிராக தடையுத்தரவு கோரி, மல்லாகம் பொலிஸ் நிலையத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சுன்னாகம் பிரதேசசபை உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சிவகுமார் லகிந்தன் ஆகியோருக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர்.
எனினும், இன்று நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கவில்லை. குறிப்பிட்ட 3 பேரையும் வரும் திங்கள்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு பிறப்பித்துள்ளது.