அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்மாந்துறை பிரதேச சபையின் 45ஆவது அமர்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் சபா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதன்போது வழமையான சபை நடவடிக்கையை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரினால் சம்மாந்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தும் 20 உறுப்பினர்களை கொண்ட சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இவ்வரவு செலவுத் திட்டமானது சம்மாந்துறை பிரதேச மக்களின் பங்களிப்புடன் தேவைகளையும், நலனையும் முன்னுரிமைப்படுத்தி, மக்களின் கருத்துக்களையும், துறைசார் நிபுணர்களின் ஆலோசனை அடங்கிய வரவு செலவுத்திட்டம் என்பதனால் பிரதேச சபையின் சகல உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்துடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.