மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை என வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களின் திருத்த வேலைகள் தொடர்பில் கலந்துரையாடினோம் அனைத்து குளங்களும் திருத்தப்பட வேண்டும். குளங்களின் நிலப்பகுதிகள் சில மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம். மற்றும் கால்நடைகளுக்கு உணவு பிரச்சனை இருக்கின்றது. அதனை தீர்ப்பதற்கு என்ன செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.
அத்துடன் மாகாண சபைக்குள் உள்ள நிதிகளை சரியான முறையில் செலவழிப்பதில்லை. மத்திய அரசாங்கம், மாகாணசபை, ஆளுனர் அலுவலகம் என்பன இணைந்து நிதி சம்மந்தமான வேலைததிட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இருக்கும் நிதிகளை சரியான முறையில் செலவு செய்ய திட்டமிட்டு வருகின்றோம்.
அரச உத்தியோகர்தர்கள் மக்களுக்கு சரியான முறையில் வேலை செய்ய வேண்டும். ஊழல் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடன் வேலை செய்ய முடியாது. கடந்த காலத்தில் அல்லது தற்போது என்றால் கூட ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால் உரிய முறையில் விசாரணை செய்யப்படும். சிலர் வேண்டும் என்றும் குற்றச்சாட்டுக்களை சிலர் மீது சுமத்தலாம். அதனால் அதனை விசாரணை செய்யும் அதிகாரிகள் அதனை சரியாக முன்னெடுப்பார்கள். ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்க முடியாது எனத் தெரிவித்தார்.