இயக்குநர் பொன்குமரன் இயக்கத்தில் நடிகர் ஜீவா மற்றும் சிவா கூட்டணியில் உருவாக இருக்கும் “கோல்மால்“ திரைப்படத்தின் மூலம் நடிகை மாளவிகா மீண்டும் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தல அஜித் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான “உன்னைத்தேடி“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதற்குப் பிறகு “ஆனந்த பூங்காற்றே“, “வெற்றிக்கொடி கட்டு“ போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் இவர் அறியப்படும் நடிகையாக இருந்துவந்தார்.
நடிகை மாளவிகா தனது திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் நடித்துவந்தார். இறுதியாக “குருவி“ படத்தில் நடித்த அவர் கர்ப்பமானதால் பட வாய்ப்புகளை மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது 2 குழந்தைகளுக்கு தாயான அவர் 12 வருடம் கழித்து மீண்டும் “கோல்மால்“ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் உருவாகும் கோல்மால் திரைப்படம் வரும் டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.