அமேசன் காட்டில் மனிதர்களால் தீண்டப்படாத பகுதிகள்கூட பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவதாகப் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில், அதிக வெப்பமான, வறட்சியான சூழல்களால் பிரேசிலின் மழைக்காடுகளில் உள்ள பறவைகளின் உடல் அளவு குறைந்து வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், அந்தப் பறவைகளின் இறக்கைகளின் நீளம் அதிகரித்து வருகிறது. Science Advances சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஆய்வுக்காக 40 ஆண்டு காலக்கட்டத்தில் 15,000க்கும் அதிகமான பறவைகள் பிடிக்கப்பட்டுச் சோதிக்கப்பட்டன.
பிரேசிலிய அமேசனில் உள்ள மனாஸுக்கு அருகிலுள்ள அமேசன் பல்லுயிர் மையத்தில் இந்த ஆராய்ச்சி நடந்தது. 1970 களில் இருந்து விஞ்ஞானிகள் இங்கு ஆய்வு செய்து வருகின்றனர். காடழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் மாற்றங்களின் விளைவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
அப்பகுதியில் உள்ள பறவைகளை தலைமுறைகளாக ஒரு மாறாத வழிமுறையில் பிடித்து ஆய்வு செய்து வருகின்றனர். அவற்றின் எடையை அளவிட்டு, இறக்கைகளை அளவிடுகின்றனர்.
1980லிருந்து பெரும்பாலான வகைப் பறவைகளின் எடை சராசரியாக 2 வீதம் குறைந்துள்ளது.
இப்போது கடந்த 40 ஆண்டுகளில் 77 பறவை இனங்கள் பற்றிய தரவுகளை பகுப்பாய்வு செய்யும் விஞ்ஞானிகள், அங்கு காணப்படும் புலம்பெயர்ந்த உயிரினங்கள் கிட்டத்தட்ட சிறியதாகிவிட்டதாகக் கூறுகின்றனர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கு பறவைகளின் இறக்கைகள் நீளமாகியுள்ளன.
அதிக உயரத்தில் பறக்கும் பறவைகளின் உடல் எடையிலும் இறக்கை அளவிலும் தான் கணிசமான மாற்றங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பருவநிலை மாற்றத்திற்கு இடையே, சிறிய உடல் அளவும் நன்மையே என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உடல் சிறியதாக இருந்தால் உடல் வெப்பத்தைத் தணிப்பது சுலபமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
புதிய தரவிலுள்ள பெரும்பாலான பறவைகள், சில கிலோமீட்டர் சுற்றளவில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கின்றன.
பெர்க்மேனின் விதி என்று அழைக்கப்படும் 150 ஆண்டுகள் பழமையான கொள்கையினடிப்படையில், அமேசன் பறவைகளின் மாற்றத்தின் காரணத்தை விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள். பெர்க்மேனின் விதிப்படி, அதிகரித்த வெப்பமான பகுதிகளில் சிறிய உடல்களும், வெப்பம் குறைந்த பகுதிகளில் பெரிய உடல்களும் காணப்படும்.
ஆனால், பறவைகளின் இறக்கையின் நீளம் அதிகரிப்பது விஞ்ஞானகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.