ரி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தாலும், அந்த அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் ஒரு “போர்வீரன்” என்று கிரிக்கெட் பிரமுகர்களும் ரசிகர்களும் பாராட்டியுள்ளனர்.
அரையிறுதியில் ரிஸ்வான் அரைசதம் அடித்தார். ஆனால், களம் இறங்குவதற்கு முன், கடுமையான மார்பு நோய்த்தொற்றால் மருத்துவமனையில் இருந்த புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.
டுபாயில் வியாழன் அன்று நடந்த அரையிறுதியில் பாகிஸ்தான் அணி 176 ஓட்டங்களை பெற்றது. ரிஸ்வான் 52 பந்துகளில் 67 ஓட்டங்களை எடுத்தார்.
இந்த போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குநுழைந்தது.
ரிஸ்வான் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு இரவுகள் தீவிர சிகிச்சையில் கழித்ததாக குழு மருத்துவர் கூறினார்.
“அவர் நம்பமுடியாத அளவிற்கு குணமடைந்தார். போட்டிக்கு முன்னதாகவே தகுதியானவராக கருதப்பட்டார்” என்று மருத்துவர் நஜீபுல்லா சூம்ரோ கூறினார்.
கப்டன் பாபர் ஆசம் கூறும்போது, “அவரது உடல்நிலை குறித்து நான் கேட்டபோது, ‘இல்லை, நான் விளையாடுவேன்’ என்று கூறினார்,” என்றார்.
அரையிறுதியில் அரைச்சதம் அடித்ததன் மூலம், ரிஸ்வான் இந்த ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் 1,000 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் ஆனார். உலகக் கோப்பை போட்டியில் 70.25 சராசரியில் 281 ஓட்டங்கள் எடுத்த ரிஸ்வான், இந்த உலகக்கோப்பையில் அதிக ஓட்டம் குவித்தவர்கள் பட்டியலில் பாபருக்கு (303) அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
‘அவர் ஒரு போர்வீரன்,” என்று பாகிஸ்தான் துடுப்பாட்ட பயிற்சியாளர் மத்யூ ஹெய்டன் கூறினார்.
Can you imagine this guy played for his country today & gave his best.
He was in the hospital last two days.
Massive respect @iMRizwanPak .
Hero. pic.twitter.com/kdpYukcm5I— Shoaib Akhtar (@shoaib100mph) November 11, 2021
ரிஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த படத்தையும் பகிர்ந்த ஷோயப் அக்தர், உங்களால் நம்ப முடிகிறதா, இவர் இன்று நாட்டுக்காக ஆடி பெரிய பங்களிப்பு செய்ததை? கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பெரிய மரியாதை ஏற்படுகிறது. ஹீரோ ரிஸ்வான்” என்று பதிவிட்டுள்ளார்.