லிந்துலை நாகசேனை நகத்தில் இருந்து பெரிய இராணிவத்தை தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் அடிக்கடி கற்பாறைகள் சரிந்து விழுவதால் இப்பாதையூடாக வாகனங்கள் செல்லமுடியாத காரணத்தினால் இன்று (10) காலை 10 மணிக்கு பிரதான வீதியை மறித்து வாகன சாரதிகளும் 50 இற்கு மேற்பட்ட பிரதேச மக்களும் இணைந்து வீதியை புனரமைப்பு செய்யுமாறு கோரி நாகசேனை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்தோடு இப்பகுதியிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளும் கலந்து கொண்டதோடு வாகனங்களும் நிறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. அதேவேளை நேற்று இரவு பெய்த கடும் மழையால் பாதையில் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளது. இதனையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அப்புறப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பாதையில் கற்பாறைகள் சரிந்து விழகூடிய ஆபத்தான நிலை காணப்படுவதோடு, நாகசேனை நகரத்தில் இருந்து பெரிய இராணிவத்தை செல்லும் ஏழு கிலோமட்டர் தூரம் கொண்ட பாதை மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு குன்றும் குழியுமாக காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின் போக்குவரத்து சேவையை முறையாக பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே பாதையினை உடனடியாக புனரமைத்து தருவதற்கு அக்கரப்பத்தனை பிரதேச சபை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
–க.கிஷாந்தன்-