ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் தனது கணவர் புலனாய்வு அதிகாரிகளை பலமுறை சந்தித்ததாக சஹ்ரானின் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சஹ்ரானின் மனைவி வழங்கிய அறிக்கையின் பிரதியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
“சஹ்ரானின் மனைவி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேட்டுக்கொள்கிறோம். ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல்களுக்கு முன்னதாக உளவுத்துறை அதிகாரிகளை சஹ்ரான் சந்தித்தார் என்பதை நிரூபிக்க எங்களிடம் ஆதாரம் உள்ளது. சஹாரானின் மனைவி தனது அறிக்கையில் இதை உறுதி செய்துள்ளார்” என்று ஹரின் கூறினார்.
“தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெலனிகம வெளியேறும் இடத்தில் பொலிஸாரால் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு லொறிகள், ஒரு குறிப்பிட்ட உயர் போலீஸ் அதிகாரியின் உத்தரவின் பேரில் 2019 ஏப்ரல் 04 ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த காவல்துறை அதிகாரி ஏப்ரல் 21 ஆம் திகதி பிரபலமான ‘மாலு மாலு’ ரிசார்ட்டில் இருந்துள்ளார். இந்த லொறிகள் குறித்த தகவல்களை நேரில் பார்த்தவர்கள் கார்டினல் மால்கம் ரஞ்சித்திடம் கூட வெளிப்படுத்தியுள்ளனர்“ என்றும் தெரிவித்தார்.
பின்னர் உரையாற்றிய மனுஷ நாணயக்கார எம்.பி, “பிடிபட்ட இரண்டு லொரிகளிலும் வெடிபொருட்கள் இருந்தன. உயர் போலீஸ் அதிகாரி ஐயாயிரம் ரூபாய் நோட்டில் லஞ்சம் வாங்கியிருந்தார். மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து அவர்கள் சார்பாகப் பேசுமாறு கோரிய பொலிஸ் அதிகாரிகள் குழுவில் இந்த உயர் பொலிஸ் அதிகாரியும் இடம்பெற்றுள்ளாரா?“ என கேள்வி எழுப்பினார்.