கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பரியாரம் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அஷ்ரப் என்பவரின் வீட்டில் இருந்து பணம், நகைகள் திருடப்பட்டன. இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
இந்த சூழலில் அஷ்ரப் குடும்பத்தினர் நேற்று முன்தினம் காலையில் வீட்டின் கதவை திறந்தனர். அப்போது வீட்டின் வாசலில் 3 பைகள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது ரூ.1,91,500 ரொக்க பணம், 4.5 பவுன் தங்கச் சங்கிலி, 630 மில்லி கிராம் தங்க கட்டி ஆகியவை இருந்தன.
அதோடு ஒரு கடிதமும் இருந்தது. அதில். கொரோனா காலத்தில் பல வீடுகளில் திருடிவிட்டேன். நான் செய்த தவறுக்காக வருந்துகிறேன். எந்தெந்த வீடுகளில் எவ்வளவு திருடினேன் என்பதை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். திருடிய நகை, பணத்தை வைத்துள்ளேன். சம்பந்தப்பட்டவர்களிடம் நகை, பணத்தை திருப்பி அளிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
நகை, பணம் மற்றும் கடிதத்தை பரியாரம் காவல் நிலையத்தில் அஷ்ரப் ஒப்படைத்தார். அவை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டன.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்டவர்களிடம் நகை, பணத்தை திருப்பி அளிக்க காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.