குறைந்தபட்சம் 100 ஊழியர்களைக் கொண்ட அமெரிக்க நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் அல்லது வாரந்தோறும் சோதனை செய்யப்பட வேண்டும் என்ற பைடன் நிர்வாகத்தின் முயற்சிகளை முடக்கும் வகையில் அமெரிக்க ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் சனிக்கிழமை தற்காலிக தடை விதித்துள்ளது.
பெரிய நிறுவனங்களின் ஊழியர்கள், வரும் ஜனவரி 4ஆம் திகதிக்குள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் காலக்கெடு விதித்திருந்தார்.
இந்த உத்தரவால், அமெரிக்க ஊழியர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
ஜனாதிபதியின் உத்தரவிற்கு எதிராக பல வணிக நிறுவனங்கள், சட்டத்தரணி குழுக்கள் மற்றும் டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, தென் கரோலினா மற்றும் உட்டா மாநிலங்கள் மனுத் தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை தொடர்ந்தே, ஜனாதிபதி பைடனின் முடிவிற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் உத்தரவு, அரசமைப்பு ரீதியாவும் சட்ட ரீதியாகவும் சிக்கல் நிறைந்திருப்பதாக மனுதாரர்கள் சுட்டியிருந்தனர்.
இரண்டு பக்கங்கள் கொண்ட இந்த உத்தரவில், இந்த விதிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, பிடன் நிர்வாகம், திங்கட்கிழமை மாலை 5 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.