கலைகள் மூலமாகவே பிரிந்து போயுள்ள சமூகங்களை ஒண்றிணைக்க முடியும். அதனால் நாட்டின் கலைகள் தொடர்பில் தேசிய ரீதியில் நிலையான கொள்கை வகுக்கப்படும் என தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் கலைஞர்களுடன் இன்று (04) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் சமூகம் பல்வேறு வழிகளிலும் கூறுபட்ட நிலையில் இருக்கின்றது. அதனை கலைகள் ஊடாக ஒன்றிணைக்க முடியும். அதனால் அதனை இனங்கண்டு நாம் முன்னெடுத்துச செல்ல இருக்கின்றோம். இந்த மாவட்டத்தின் கலைஞர்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் அவர்களது சிபார்சுகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துவதுடன், அதனை தீர்த்து வைக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துகின்றோம்.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக பொருளாதாரப் பிரச்சனையால் முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் புதிதாக சிந்தித்து செயற்பட வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம். நாங்கள் பலவேறு காரணங்களை சொல்லி கலையில் இருந்து விலகிச் செல்லாது இருக்க வேண்டும். எமது பாடசாலைப் பிள்ளைகளுக்கும் கலைகள் தொடர்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
கலைகளில் ஆர்வம் உள்ள சிறுவர்களை இனங்கண்டுள்ளோம். அவர்களையும் இணைந்துக் கொண்டு நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். களத்தில் கலைஞர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள். அதனை ஆராய்ந்து பட்டியல்படுத்தி எமது அமைச்சுக்கு தர முடியும். மக்களை திருப்திப்படுத்துவது மற்றும் மக்களை சந்தோசப்படுத்த்துவது தொடர்பில் நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டும். தேர்தல் காலங்களில் மக்களை வீடு வீடாகச் சென்று மதிக்கிறார்கள். தேர்தல் முடிந்த பின் மக்கள் தான் தேர்தலில் வென்றவர்களை தேட வேண்டியுள்ளது. அது தான் நடக்கிறது. அந்த நிலை மாறி மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.
இன்றைய இளம் சந்தியினருக்கு சாப்பாடு இல்லை என்றாலும் பரவாயில்லை கையில் தொலைபேசி இருந்தால போதும் என்ற நிலை உள்ளது. வீட்டில் உள்ள தாய், தந்தையர், சகோதரர்களுடன் கதைக்க நேரமில்லாது தொலைபேசியில் இளம் சமூகம் காலத்தை கடத்துகிறது. ஆகவே தொழில்நுட்பத்திற்கு அடிமைப்பட்ட நிலை காணப்படுகின்றது. இநத அடிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கக் கூடிய சக்தியும், பலமும் கலைக்கு தான் இருக்கிறது. கலைக்கு நாங்கள் நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். கலைஞர்களை மேலும் பலப்படுத்த வேண்டும்.
கலைகளுக்காக பணத்தை ஒதுக்கின்றோம். அந்த பணம் முடிந்த பின் அவை அவ்வாறே நிற்கின்றன. இதை சரி செய்ய வேண்டும். இதற்கான ஒரு கொள்கை இல்லை. ஒவ்வொரு அரசாங்கமும் மாறும் போது அதில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அமைச்சர்கள், அமைச்சின் அதிகாரிகள் மாறுகிறார்கள். எனவே அரசாங்கம், அமைச்சர், அதிகாரிகள் மாறினாலும் மாறாத வகையில் ஒரு கொள்கை இருக்க வேண்டும். அதனால் தான் நாம் கலை, அழகு என்பவற்றை உள்ளடக்கி தேசிய ரீதியில் ஒரு நிலையான கொள்கையை வகுக்க வேண்டும் என எண்ணியுள்ளோம். அது எவராலும் மாற்றப்படாததாக இருக்க வேண்டும். தேசிய கொள்கைத் திட்டத்தின் ஊடாக கலை, கலாசாரம், அருங்கலைகள், இளம் கலைஞர்கள் ஆகியோரை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
நாங்கள் தமிழ், ஹிந்தி படங்களைப் பார்த்தோம். தமிழர்களிடம் பாராம்பரிய கலை பண்பாடுகள் இருந்தன. அதனையும் நாம் பாதுகாக்க வேண்டும். நாம் இனம், மதம், மொழி என பல கூறுகளாக வேறுபட்டுள்ளோம். நாங்கள் இவற்றை கலையால் இணைக்க வேண்டும். ஆகவே இருளில் இருந்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அந்த இருளை நீக்க ஒளியை ஏற்றுவோம்.
வடக்குக்கான விஜயமாக வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளேன். தொலைபொருட் சின்னங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளோம். அவை பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் கலைஞர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டுள்ளோம். வடக்கில் கலைஞர்கள் எதிர்நோக்கும் அதே பிரச்சனையைத் தான் தெற்கிலும் கலைஞர்கள் எதிர்நோக்குகிறார்கள். அவற்றில் எந்த மாற்றமில்லை. ஆகையால் கலை தொடர்பில் தேசிய ரீதியில் கொள்கை வகுக்கப்பட்டால் அந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். அதற்கான நடவடிக்கையை எடுத்து நாம் முன்னோக்கி நகர்கின்றோம் எனத் தெரிவித்தார்.