தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் இருக்கும் பிரச்சனை போன்றுதான் அரசாங்கத்திலும் கருத்து வேறுபாடுகள் உள்ளது. இதனால் ஆட்சி இப்போதைக்கு கவிழ்க்கப்படாது. தொடர்ந்து பயணிக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று எமது அரசாங்கம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் தலைமைத்துவத்திலும், பிரதமர் மகிந்தராஜபக்சவின் வழிகாட்டலிலும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் நாடு தழுவிய ரீதியில் இனவாதமற்று, பிரதேசவாதமற்று நடைபெறுகின்றது.
அந்த வகையில் இந்த வருடம் கிட்டத்தட்ட 100க்கு மேற்பட்ட குளங்களிற்கு நிதியொதுக்கப்பட்டு அதனை புனரமைத்து மக்களுடைய சிறந்த பயன்பாட்டுக்கு விடுவதற்காக இந்தத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
மாகாண சபை தேர்தல் நடத்துவது நிச்சயமில்லை. தற்பொழுதுள்ள நாட்டு சூழல் இந்த கொரோனா நிலைமைகள் அதற்கான சாத்தயமான நிலை இருப்பதாக தெரியவில்லை. கடந்த முண்டாட்சி காலத்தில் அவர்கள் இந்த தேர்தலை வைத்திருக்கலாம். அவர்கள் இருப்பதை குழப்பிவிட்ட நிலைமை உள்ளது. அவர்களின் வழக்கமான நிலையே அதுதான். முண்டாட்சி புரிந்தவர்கள் மக்களுடைய இந்த பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக வைத்திருப்பதுதான் அவர்களுடைய நோக்கமாக வரலாறு வெளிப்படுத்தி வருகின்றது.
வரவிருக்கும் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கம் தோற்கடிக்கப்படும் சூழல் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இது வழமையான பொய்யாகும். வழமையான பொய்களில் இதுவுமொரு பொய். முன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. ஆனால் இதற்கு சாதாரண பெரும்பான்மை போதுமாகும். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது.
இந்த அரசாங்கம் உடனடியாக கவிழ்ந்து போகும் நிலையில் இல்லை. அது தொடர்ந்தும் போகும். இந்த அரசாங்கத்தினை தலைமை தாங்குபவர்கள் சர்வதேச சமூகங்களாலேயே தீர்க்க முடியாமல் நீண்டகாலமாக இருந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
உலகலாவிய ரீதியில் பரவிய கொரோனாவைக்கூட ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு பல விடயங்களை ஓரிரு வருடங்களிற்குள் செய்து முடித்து ஒரு நல்ல நிலைமை மக்களிற்கு கொடுக்கும். அதைத்தான் உண்மையில் நல்லாட்சி என்று சொல்ல வேண்டும்.
ஆளும்தரப்பில் உள்ள குழப்ப நிலைகள் தீர்க்கப்படுமா என ஊடகவியலாளர் அமைச்சரிடம் வினவினார்.
அது எங்கேயும் இருக்கும். வீட்டுக்கு வீடு வாசல்ப்படி மாற்றுக்கருத்துக்கள் எல்லாம் இருக்கும். இப்பொழுது ஆட்சியில் இல்லாத கட்சிகளிற்குள்ளேயே பிரச்சினைகள் இருக்கின்றது.
உதாரணத்திற்கு நீங்கள் இருக்கின்ற பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று ஒன்று இருக்கின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள்ளேயே பிரச்சினைகள் இருக்கின்றது. அதைவிட அந்த கட்சிகளிற்குள்ளுயே பிரச்சினைகள் இருக்கின்றது. இது பொதுவான நிலையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.