சில விடயங்களில் தேவையான கவனம் செலுத்தப்படாததால், நாட்டில் COVID-19 நிலைமை மீண்டும் கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது, நெகிழ்வான வேலை நேரம் மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான இளைஞர்கள் தடுப்பூசியைப் பெறாதது ஆகியவை தீவிரமான மற்றும் உடனடி கவனம் தேவைப்படும் சில முக்கிய காரணிகள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா, தற்போது போதிய பஸ்கள் மற்றும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படாத நிலையில் பொதுமக்களை குறை கூற முடியாது. நெரிசலை விளைவித்த நெகிழ்வான வேலை நேரங்களை அறிமுகப்படுத்த நிறுவனங்களும் தயாராக இல்லை என்றார்.
COVID-19 க்கு எதிராக இளைஞர்கள் தடுப்பூசி போட மறுப்பது நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு கவலைக்குரிய வளர்ச்சியாகும் என்றும் வலியுறுத்தினார்.
நாட்டில் இன்னொரு அலை எழுந்தால், மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.