யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழ் பேசும் சிறுபான்மையின கட்சிகளின் சந்திப்பு நிறைவடைந்துள்ளது. இதில், சில விடயங்களில் இணக்கம் காணப்பட்டு, அவற்றை ஒரே குரலில் வலியுறுத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இந்த சந்திப்பில்,
இனப்பிரச்சனை தீர்விற்கான உடனடியான, நியாயமான தீர்வு காணப்பட வேண்டும்.
13வது திருத்தம் முழுமையான அமுல்ப்படுத்தப்பட்டு, அதன் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
அரசின் பல்வேறு நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
ஒரேநாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைப்பது. அதனை நிராகரிக்கிறோம்.
என கட்சிகளிற்கிடையில் இணக்கப்பாடு ஏற்பட்டு, கூட்டறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. சற்று நேரத்தில் கூட்டறிக்கை வெளியாகி, பத்திரிகையாளர் சந்திப்பும் இடம்பெறும்.
இந்த சந்திப்பு திருநெல்வேலி திண்ணை விடுதியில் நடந்தது.
திருநெல்வேலி திண்ணை விடுதியில் காலை 10 மணிக்கு சந்திப்பு ஆரம்பமாகியது.
இதில் ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், கு.சுரேந்திரன், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ரவூப் ஹக்கீம், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் சார்பில் என்.சிறிகாந்தா, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.