உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் 2030ஆம் ஆண்டுக்குள் காடுகளை அழிப்பதை நிறுத்த சம்மதம் தெரிவித்துள்ளனர்.
COP 26 பருவநிலை மாநாட்டில், அதற்கான உடன்பாட்டில் தலைவர்கள் கையெழுத்திடவுள்ளனர்.
COP26 இன் முதல் பெரிய ஒப்பந்தம் இன்று (2) பிற்பகுதியில் கையெழுத்திடப்பட உள்ளது.
முன்னோடியில்லாத ஒரு நடவடிக்கையில், பூமியின் 85 சதவீதத்திற்கும் அதிகமான காடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் காடழிப்பு மற்றும் நிலச் சீரழிவை நிறுத்தவும் மாற்றவும் உறுதியளித்துள்ளனர்.
உலகின் மிகப் பெரிய காடுகளான அமேசன் மழைக்காடுகளை உள்ளடக்கிய பெரும்பாலான நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பொலிவியா மற்றும் வெனிசுலா மட்டும் உறுதிமொழியில் சேரவில்லை, ஆனால் பிரேசில் (அமேசனின் பெரும்பகுதி காணப்படும்) உறுதிமொழியில் சேர்ந்துள்ளது.
உலகின் காடுகளைப் பாதுகாக்க இதுவரை எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாக இது அமைகிறது. காடு மற்றும் நிலப் பயன்பாடு குறித்த கிளாஸ்கோ தலைவர்களின் பிரகடனத்திற்கு உறுதியளிக்கும் நாடுகள் 33.7 மில்லியன் சதுர கிலோமீட்டர் காடுகளைக் குறிக்கின்றன.
இந்த திட்டத்திற்காக கிட்டத்தட்ட 16.5 பில்லியன் பொது (€10.3bn) மற்றும் தனியார் (€6.24bn) பணம் திரட்டப்படும். பொது நிதி பிரிட்டன் உட்பட 12 நாடுகளால் வழங்கப்படும். இது, 2021-2025 க்குள் வழங்கப்படும்.
அவிவா, ஷ்ரோடர்ஸ் மற்றும் ஆக்சா போன்ற 30க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து தனியார் துறை நிதி வருகிறது. இந்த நிறுவனங்கள் காடழிப்புடன் தொடர்புடைய நடவடிக்கைகளை அகற்றுவதாகவும் உறுதியளிக்கும்.
வளரும் நாடுகளில், குறிப்பாக சீரழிந்த நிலத்தை மீட்டெடுப்பதற்கும், காட்டுத்தீயைச் சமாளிப்பதற்கும், பழங்குடியின சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்தப் பணம் பயன்படுத்தப்படும்.
பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்த உறுதிமொழியை “பூமியின் காடுகளைப் பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் ஒரு முக்கிய ஒப்பந்தம்” என்று குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த புதிய நடவடிக்கைக்கு பொறுப்புக்கூறல் இல்லாமையை விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்