மிகப்பெரும் போதைப்பொருள் வியாபாரி என கூறப்படும் தெமட்டகொட ருவான், 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கடல் வழியாக இலங்கைக்கு 700 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 720 கிலோ கிராம் ஹெரோயின், 321 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 30 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த வருடம் ஏப்ரல் மாதம், இந்திய கடலோர காவல்படையினர் 340 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற ஐந்து சந்தேக நபர்களுடன் பல நாள் இழுவை படகு ஒன்றை கைது செய்தனர்.
சந்தேகநபரிடம் இருந்த செய்மதி தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு பல நாள் இழுவை படகில் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாகவும், குறித்த போதைப்பொருள் தெமட்டகொட ருவானுக்கு கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
2019ஆம் ஆண்டு 200 கிலோ கிராம் ஹெரோயின், 5 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 30 கிலோ கிராம் ஹசீஸ் ஆகியவை நாட்டுக்குள் கடத்தப்பட்டுள்ளன.
2021ஆம் ஆண்டுக்குள் 21 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளை கொண்டு வரப்பட்டுள்ளது.
ருவன் எனும் குறித்த நபர், சட்டவிரோத சொத்து மற்றும் வருமான விசாரணை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் தெமட்டகொடையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று முன்தினம் (29) கைது செய்யப்பட்டார்.
இந்தப் பணத்தில் வாங்கியதாக கூறப்படும் ஆறு சொகுசு வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
டுபாயில் மறைந்திருக்கும் ‘ரங்க’ என்ற நபரின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் உள்ள சக்திவாய்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.