நடிகர் ஷாருக் கானின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் ரசிகர்கள் மன்னத் இல்லம் முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்
நடிகர் ஷாருக் கானின் மூத்த மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைதாகி மூன்று வாரங்களுக்குப் பிறகு ஜாமீன் கிடைத்திருக்கிறது. ஆர்யனின் ஜாமீனுக்காக மூன்று வாரங்களாக அயராது பாடுபட்ட ஷாருக் கான், தனது வீட்டைவிட்டுக்கூட வெளியில் வராமல் இருந்தார். ஒரு முறை தனது மகனை மட்டும் சிறையில் சென்று பார்த்துவந்தார். வெள்ளிக்கிழமை ஆர்யனுக்கு ஜாமீன் கிடைத்தவுடன் ஜாமீனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுடன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார் ஷாருக் கான்.
ஆர்யனின் ஜாமீன் செய்தியால் ஷாருக் கான் இல்லமும் விழாக்கோலம் பூண்டது. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஷாருக் கானின் பாந்த்ரா இல்லமான ‘மன்னத்’ எதிரில் கூடியிருந்தனர். ஜாமீன் கிடைத்துவிட்டதாக செய்தி கிடைத்தவுடன் ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஷாருக் கானின் இளைய மகன் ஆப்ரஹாம் வீட்டின் பால்கனியில் நின்று ரசிகர்களைப் பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆர்யனுக்கு ஜாமீன் கிடைத்ததும் நடிகர் மாதவன், சோனு சூட், மிகாசிங் உட்பட ஏராளமானோர் சமூக வலைதளத்தில் ஆர்யனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். வெள்ளிக்கிழமை (இன்று) ஆர்யன் சிறையிலிருந்து வெளியில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியை ஷாருக் கான் லண்டனிலிருந்து வரவழைத்திருந்தார். ஜாமீன் வழங்குவதாக அறிவித்தவுடன் ஷாருக் கானின் மற்றொரு வழக்கறிஞர் சதீஷ் ரொக்க ஜாமீனில் ஆர்யனை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் நீதிபதி அதி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தீர்ப்பு விவரங்களை நாளைதான் (இன்று) தெரிவிக்க முடியும் என்று தெரிவித்துவிட்டார். இதனால் தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் வெள்ளிக்கிழமையே சட்ட நடைமுறைகளை முடித்துக்கொண்டு ஆர்யனை சிறையிலிருந்து வெளியில் எடுக்க ஷாருக் கான் வழக்கறிஞர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். மாலை 7 மணிக்குள் சட்ட நடைமுறைகளை முடித்தால் மட்டுமே ஆர்யன் சிறையிலிருந்து வெளியில் வர முடியும்.
தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் முகுல் கூறுகையில், ‘ஜாமீன் குறித்து ஷாருக் கானிடம் தெரிவித்தபோது மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர்விட்டார்’ என்றார்.
ஷாருக் கான் மேலாளர் பூஜா அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலும் ஷாருக் கான் தரப்பில் கலந்துகொண்டார்.