ஒரே நாடு ஒரே சட்டம் இயற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பொதுபல சேனாவின் செயலாளர் கலக்கட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் எனும் இந்த தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இதுவரை பேணப்பட்டு வந்த மரபுகளும், மாண்புகளும் உடைத்தெறியப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்ட சட்டங்களை குறியாக வைத்து ஒரே நாடு ஒரே சட்டம் எனும் இந்த கொள்கை கடந்த நல்லாட்சியில் சமர்ப்பிக்கப்பட்டு இப்போதும் பேசுபொருளாக இருந்து வரும் விடயமாக உள்ளது. வெளிப்படையாக கூறுவதாயின் தமிழ் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தெற்கிலுள்ள பல அரசியல்வாதிகள் பேசிவந்தனர். ஆனால் இந்த விடயம் நாடு கொரோனாவில் சிக்கி இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டு தவிப்பதுடன் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியுள்ள இந்த காலப்பகுதியில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், இது நாட்டில் சட்டம் இயற்றும் துறை சம்பந்தமாக சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை சட்ட வரைஞர் திணைக்களம், சட்டமேதகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் என பலரும் இருக்கத்தக்கதாக இப்போது இந்த விடயத்தை தலைமையேற்று வழிநடத்த சட்டம் சம்பந்தமான எவ்வித அறிவுமில்லாத பல வழக்குகளில் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை பெற்ற ஒருவரான மதப்பிரிவொன்றின் போதகரை நியமித்து ஒரே நாடு ஒரே சட்டம் எனும் முக்கிய வரைபை கட்டமைக்கும் பொறுப்பை கையளித்திருப்பதை எவ்விதத்திலும் அறிவு சார்ந்த சமூகமும், நாட்டில் நிலையான சமாதானத்தை விரும்பும் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இந்த நாட்டின் இன ஐக்கியத்திற்கு எதிராக யார் பேசிவருகிறாரோ, குழப்பவாதியாக மக்களால் யார் அடையாளப்படுத்தப்படுகிறாரோ அவரையே இங்கு முன்னிலைப்படுத்தியுள்ளார்கள். அண்மையில் கூட அவர் மத நிந்தனையும், இறை நிந்தனையும் செய்து சமூகங்களுக்கிடையில் மனக்கசப்புக்களை தோற்றுவித்தவர். அவரை இந்த பதவிக்கு நியமித்திருப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதுடன் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆணித்தரமாக தெரிவித்து கொள்கிறேன். இது தொடர்பிலான பலத்த கண்டனங்களை அரசாங்கத்தின் பொறுப்புதாரிகளுக்கு தெரிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.