ஆசிப் அலியின் அதிரடியான ஆட்டம், ஷோயிப் மாலிக்கின் அனுபவம், ஹரி்ஸ் ராஃபின் பந்துவீச்சு ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ரி20 உலகக் கோப்பையின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.
முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 வி்க்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. 135 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு135 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி கடந்த மாதம் எந்தவிதக் காரணமும் இன்றி ஒருநாள், ரி20 தொடரை போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன் ரத்து செய்து தாயகம் திரும்பியது.
நியூஸிலாந்து அணியின் செயலால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகுந்த வேதனையிலும், அதிருப்தியிலும் இருந்தது. சர்வதேச அளவில் பெரும் வெற்றிகள்தான் நம்மை தகுதியான அணி என்று திரும்பிப்பார்க்க வைக்கும் என்று வாரியத் தலைவர் ரமிஸ் ராஜா தெரிவித்திருந்தார்.
நியூஸிலாந்து அணியின் செயலுக்கு பழிதீர்க்கும் வகையில் நேற்று தோற்கடித்து தாங்கள் வெல்லத் தகுதியானவர்கள் என்பதை பாகிஸ்தான் நிரூபித்துள்ளது.
இந்த வெற்றியி்ன் மூலம் ஐக்கிய அரபுஅமீரகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து தான் மோதிய எந்த ரி20 போட்டியிலும் தோல்வி அடைந்ததில்லை எனும் பெருமையை பாகிஸ்தான் தக்கவைத்துக் கொண்டது. அதாவது தொடர்ந்து 13 போட்டிகளாக பாகிஸ்தான் அணி தோல்வியைச் சந்திக்காமல் பயணித்து வருகிறது.
இந்த வெற்றியின் மூலம் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி பெற்று 2வது இடத்தில் இருந்தாலும், ரன்ரேட்டில் உச்சத்தில் இருக்கிறது.
இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து துடுப்பாட்ட வரிசையைக் குலைத்த பாகிஸ்தான வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ராஃப் ஆட்டநாயகன் விருது பெற்றார். 4 ஓவர்கள் வீசிய ஹாரிஸ் ராஃப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை ரொஸ் வென்றதிலிருந்து ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டனர். அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியிடம் இருக்கும் வகை, வகையான பந்துவீச்சாளர்கள்தான். ஷார்ஜா பழக்கப்பட்ட மைதானம் என்பதால், தங்கள் பந்துவீச்சில் வேரியேஷன்களை எளிதாக பந்துவீச்சில் வெளிப்படுத்த முடிந்தது. இதனால் ஓவருக்கு 6 ரன்கள் வீதம் மட்டுமே பாகிஸ்தான் வீரர்கள் கொடுத்து ஆட்டதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக வீசிய அப்ரிடி 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 21 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் ஹரிஸ் ராஃப் ஒரு பந்தை 149 கி.மீவேகத்தில் பந்துவீசினாலும் அடுத்த பந்தின் வேகத்தை 120கி.மீவீசி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தார். தனது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை வெளிப்படுத்தி ராஃப் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். ராஃப் கைப்பற்றிய 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட் ஸ்லோவர் பந்துவீச்சில் எடுக்கப்பட்டவை.
விக்கெட் சரிவு
பாகிஸ்தான் பேட்டிங்கை பொறுத்தவரை 135 ரன்கள் இலக்கை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் களமிறங்கியது. பாபர் ஆஸம் (9) ரன்னில் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்துவந்த பக்கர் ஜமான் (11) சோதி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளிேயறினார். முகமது ஹபீஸ் வந்து ரிஸ்வானுடன் சேர்ந்து ஓரளவுக்கு அணியை சரிவிலிருந்து மீட்டார். ஆனால் ஹபீஸ் அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் கான்வே அருமையான கட்ச் பிடித்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார். ஹபீஸ் 11 ரன்னில் சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
களத்தில் நின்று செட்டிலாகிய ஓரளவுக்கு நம்பிக்கையளித்த ரிஸ்வான் 33 ரன்னில் சோதி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். இமாத் வாசிம் தேவையில்லாத ஷொட்களை ஆடி 11 ரன்னில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 6வது விக்கெட்டுக்கு அனுபவ வீரர் ஷோயிப் மாலிக், ஆசிப் அலி ஜோடி சேர்ந்தனர். இருவரும் களத்தில் இருந்தபோது ஆட்டம் நியூஸிலாந்து பக்கம் இருந்தது.
திருப்புமுனை
கடைசி 5 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 44 ரன்கள் தேவைப்பட்டது. சோதி வீசிய 16வது ஓவரில் மாலிக் ஒருபவுண்டரி உள்பட 7 ரன்கள் சேர்த்தார். சவுதி வீசிய 17வது ஓவரில் ஆசிப் அலி இரு சிக்ஸர்கள் உள்பட 13 ரன்களை விளாசி ஆட்டத்தை திருப்பிவிட்டார். 18 பந்துகளுக்கு 24 சேர்த்தால் வெற்றி என்ற கணக்கில் வந்து பாகிஸ்தான் அணியை நிம்மதி அடையவைத்தது.
சான்ட்னர் வீசிய 18வது ஓவரி்ல் ஷோயிப் மாலிக் சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்கள் சேர்க்க ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் நகர்ந்தது. 2 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. போல்ட் வீசிய 19வது ஓவரில் முதல் பந்தில் மாலிக் ஒரு ரன் எடுத்தார், அடுத்த பந்தில் ஆசிப் அலி ரன் எடுக்கவி்ல்லை. 3வது பந்தில் லோங் ஓன் திசையில் சிக்ஸர் அடித்து வெற்றியை நோக்கிநகர்த்தினார். அடுத்த பந்தில் 2 ரன் எடுக்க பாகிஸ்தான் வென்றது.
ஆசிப் அலி 12 பந்துகளில் 27 ரன்களுடனும் (3 சிக்ஸர், ஒரு பவுண்டரி), ஷோயப் மாலிக் 26 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிாலந்து தரப்பி்ல சோதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூஸிலாந்து திணறல்
நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை 134 ரன்களை வைத்துக் கொண்டு ஷார்ஜா போன்ற சிறிய மைதானங்களில் டிபென்ட் செய்ய நினைப்பது அதீத நம்பிக்கையாகும். அதிலும் பாகிஸ்தான் அடிபட்ட புலியாக இருக்கிறது, பேட்டிங், பந்துவீச்சில் நல்ல ஃபோர்மில் இருக்கிறார்கள், அதைவிட வீரர்கள் அனைவரும் தார்மீக ரீதியாக பெரும் நம்பிக்கையுடன் இருக்குபோது குறைந்த ஸ்கோர் உதவாது
நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களும் பாகிஸ்தான் பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டரி அடித்து நெருக்கடி அளிக்க திட்டமிட்டும் முடியவில்லை. ரி 20 லீக் போட்டிகளில் அதிரடி பேட்ஸ்மேன் எனப் பெயரெடுத்த டேரல் மிட்ஷெல் நேற்று சர்வதேச போட்டிக்கு அறிமுகமாகி தொடக்க வீரராக களமிறங்கினார். அவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்ய முயன்றும் முடியவி்ல்லை. நீசத்தை விரைவாக களமிறக்கி பிஞ்ச் ஹிட்டராக பயன்படுத்தும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
நியூஸிலாந்து அணியின் கப்டன் வில்லியம்ஸன் ஆட்டமிழக்காதவரை ரன்ரேட் ஒரளவுக்கு இருந்தது. ஆனால் அவர் ஆட்டமிழந்த பின் விக்கெட்டுகளும் சரிந்தன, ரன் ரேட்டும் படுத்துவிட்டது. 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூஸிலாந்து, அடுத்த 44 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்ஷெல் (27), கான்வே (27), வில்லியம்ஸன் (25) ஆகியோர் மட்டுமே சேர்த்தனர். மற்றவீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் ஒழுங்காக பேட்டிங் செய்யவில்லை என்று கூறுவதைவிட பாகிஸ்தான் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என்றுதான் கூற முடியும்.
இந்தியாவின் நிம்மதி
பாகிஸ்தானின் இந்த வெற்றி மறைமுகமாக இந்தியாவுக்கு உதவியுள்ளது. ஒருவேளை நியூஸிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருந்தால், நியூஸிலாந்து 2 புள்ளி பெற்றிருக்கும்.
நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி கட்டாயம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். ஒருவேளே இந்திய அணி வென்றுவிட்டால் 3 அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் இருக்கும். மற்ற 3 அணிகளையும் இந்த 3 அணிகளான ஆப்கன், ஸ்கொட்லாந்து, நமிபியாவை இந்த 3 அணிகள் நிச்சயம் வென்றுவி்டும். அப்போது அரையிறுதிக்குள் யார் செல்வது, என்பது ரன்ரேட் அடிப்படையில் முடிவு செய்யப்படும். இது 3 அணிகளுக்குமே பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
ஆனால், தற்போது பாகிஸ்தான் அணி வென்றுவி்ட்டதால், இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டமே நொக்-அவுட் போன்று அமைந்துவிடும். இந்தப் போட்டியில் தோற்கும் அணி அரையிறுதிக்குள் செல்வது கடினமாகிவிடும். ஏறக்குறைய வெளியேற வேண்டியதாகிவிடும்.
இந்தியா தோல்வி அடைந்தால் இந்த சுற்றோடு மூட்டையைக் கட்டிக்கொண்டு தாயகம்வர வேண்டும். நியூஸிலாந்து தோல்வி அடைந்தால் டிக்கெட் போட்டுவிடலாம். ரன் ரேட் அடிப்படையில் யார் செல்வது என்ற குழப்பம் இருக்காது, பாகிஸ்தானின் பாதையும் தெளிவாகிவிடும்.