தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட சில முஸ்லிம் தரப்புக்கள் கொள்கையளவில் தயாராக இருப்பதாக பச்சைக்கொடி காண்பித்துள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
இந்தஇணக்கம்- பேச்சுக்கள் இன்று, நேற்று நடக்கவில்லை. ஓரிரு மாதங்களின் முன்னரே திரைமறைவில் இந்த பேச்சுக்கள் நடந்துள்ளன.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவை தம்முடன் இணைந்து செயற்பட கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக, அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத இலங்கை தமிழ் அரசு கட்சியின் மிக முக்கிய தலைவர் ஒருவரிடமிருந்து தமிழ்பக்கம் அறிந்தது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் எம்.ரி.ஹசனலி, சிறியளவிலான தூரம் இணைந்து பயணித்திருந்தார். அதன் பின்னரான சில சந்திப்புக்களில் ஹசனலி சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியதாக, தமிழ் அரசு கட்சியின் அந்த முக்கிய பிரமுகர் தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் சாணக்கிய ராகுல இராஜபுத்திரனை முன்னிலைப்படுத்தி களமிறங்கலாமா என எம்.ஏ.சுமந்திரன் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
சாணக்கியனை முன்னிறுத்தி, முஸ்லிம் மக்களின் ஆதரவையும் திரட்டினால், கிழக்கை சுலபமாக கைப்பற்றலாமென எம்.ஏ.சுமந்திரன் தரப்பு தீவிரமாக நம்புகிறார்கள்.
இதனால், முஸ்லிம் மக்களை விரைவாக கவரும் விதமான செயற்பாடுகளில் சாணக்கிய ராகுல இராஜபுத்திரன் இறங்கியுள்ளார்.
சில காலமாக முஸ்லிம் மக்களின் பாதுகாவலனாகவும் அவர் தன்னை காண்பித்துக் கொள்வதன் பின்னணி இதுதான்.
இந்த நிலையில் சாதகமான முஸ்லிம் தரப்புக்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்வாங்கிக் கொண்டு, கிழக்கு மாகாணசபை தேர்தலை சுலபமாக அணுகலாமென சுமந்திரன் தரப்பு கருதுகிறது.
இந்த பின்னணியிலேயே ஐக்கிய சமாதான கூட்டமைப்பும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது குறித்த கலந்துரையாடல்கள் நடந்துள்ளளன.
எம்.ஏ.சுமந்திரன் தரப்புடனேயே இந்த கலந்ரையாடல்கள் நடந்தன.