ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியுடன், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் இந்த கலந்துரையாடலில் பங்குபெறவுள்ளன.
இன்று நடைபெற்ற இணையவழி கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அரசியல் தீர்வின் முன்னோடியாக 13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காகவும் இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்காகவும் தமிழ்தேசிய பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளையும் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 2ஆம் திகதி நவம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கூட்டுவதென்று முடிவு எட்டப்பட்டுள்ளது.
இன்று (23) காலை பத்தரை மணியளவில் கட்சித்தலைவர்கள் கலந்து கொள்ளும் இணையவழியான கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா மற்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் சார்பிலே பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசனும் கலந்துரையாடலில் பங்குபெறுவார் என அறிய முடிகிறது.