பேஸ்புக் காதலனுடன் வாழச் சென்ற திருகோணமலை யுவதி, காதலனின் வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலகந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
திருகோணமலையின் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியை சேர்ந்த துஷானி பிரியங்கா (23) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டார்.
பேஸ்புக் மூலம் அறிமுகமாக காதலனுடன் வாழச்சென்று, 16 நாட்கள் ஒன்றாக வாழ்ந்த பின்னர், அவரது சடலம் மீட்கப்பட்டது.
கடந்த 3ஆம் திகதி அந்த யுவதி வீட்டிலிருந்து வெளியேறி, பேஸ்புக் காதலனின் வீட்டிற்கு சென்றார்.
கடந்த 19ஆம் திகதி பேஸ்புக் காதலன் முச்சக்கர வண்டி வாடகைப் பயணத்திற்கு சென்ற பின்னர், யுவதி வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
முள்ளிப்பொத்தானை, சதாம் நகரில் வசிக்கும் யுவதியின் தந்தை, மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார்.
“எனது மகள் கடந்த 3 ஆம் திகதி பலாங்கொடைக்கு செல்லப் போவதாக கூறினார். ஒருவரை காதலிப்பதாகவும், அவர் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார் என்றார்.
தன்னை மன்னிக்கும்படி கேட்டு, “நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்“ என்று விட்டு போனார்.
அவர் பலாங்கொடை சென்ற பின்னர் அடிக்கடி தொலைபேசியில் அழைத்ததால் நாங்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு முறை பேசினார். 19 ஆம் திகதி காலையில் நான் அவரிடம் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்று கேட்டபோது அவர் ஆம் என்று கூறினார். இப்போது இதை சொல்ல முடியாது என்று கூறினார். அதுதான் கடைசி அழைப்பு. இந்த மரணத்தில் எங்களுக்கு தெளிவான சந்தேகம் உள்ளது” என்றார்.
பேஸ்புக் காதலனின் தாயார் பி.கே. சுனிதா (43) போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
நான் அருகிலுள்ள வீட்டில் ஒரு பிறந்தநாள் நிகழ்விற்காக உணவு தயாரிக்க சென்று இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்தேன். துஷானி இருந்த அறையின் கதவு மூடப்பட்டது. நான் கூப்பிட்டேன். பதில் இல்லை. இளைய மகனை கூப்பிட்டு, ஒரு மேஜையில் ஏறி அறையை பார்க்கச் சொன்னேன். அவர் அறைக்குள் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். உடனடியாக அறைக்குள் நுழைந்து கழுத்தில் இருந்த பெட்ஷீட்டை வெட்டினேன். அவரை காப்பாற்ற முயற்சித்தேன் என்கிறார்.
சம்பவம் நடந்த வீட்டை பலாங்கொட பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட்ட போது, சிறுமியின் கழுத்தில் கட்டப்பட்ட துணி துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் தந்தை, மொல்லிபோதனை சதாம்நகரில் வசிக்கும் ஹேரத் முடியன்சேலகே அனுரா பண்டார போலீசாரிடம் கூறினார்.
பேஸ்புக் காதலன் அளித்த வாக்குமூலத்தில்,
“நானும் அவரும் பேஸ்புக்கில் அறிமுகமானோம். நாங்கள் 9,10 மாதங்களாக தொடர்ந்து சட் செய்து, நெருங்கிப் பழகி, காதலர்களானோம். அவரை சந்திக்க கந்தளாய் சென்றேன். அங்குள்ள ஹொட்டல் அறையொன்றில் தங்கியிருந்த பின், அவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். எங்கள் குடும்பத்தினர் இந்த உறவை விரும்பவில்லை. அவர்கள் சிறிய விஷயங்களுக்காக சண்டையிட்டனர். ஆனால் விரைவாக அனைவரும் நன்றாக பழக ஆரம்பித்தனர். நாங்கள் நன்றாக இருந்தோம். அவர் ஏன் இந்த முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை“ என்றார்.
இந்த சம்பவம் குறித்து பலாங்கொட பொலிசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.