ஷார்ஜாவில் நேற்று நடந்த ரி20 உலகக் கிண்ண போட்டியின் ஏ பிரிவு தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர்-12 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றது.
முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 10 ஓவர்களில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 45 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 7.1 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 45 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது
இலங்கை அணி தகுதிச்சுற்றில் 3 போட்டிகளிலும் வென்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது மகிழ்ச்சிதான் என்றாலும், சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் மிகப்பெரிய சோதனையைச் சந்திக்க உள்ளது.
குருப்-1 பிரிவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மே.இ.தீவுகள், தென்னாபிரிக்க அணிகளை இலங்கை அணி எதிர்கொள்ள வேண்டும். இது தவிர தகுதி்ச்சுற்றில் 2வது இடம் பிடித்த பங்களாதேஸூம் இந்த பிரிவில் இடம் பெறுகிறது. இரு அணிகளுக்கும் சூப்பர் 12 சுற்று கடுமையான சோதனையாகவே இருக்கும்.
ஒவ்வொரு வெற்றியையும் பெரிய முயற்சிக்குப் பின்தான் கிடைக்கும். ஆனால், ரி20 போட்டியைப் பொறுத்தவரை எந்த அணியையும் நாம் கணிக்க முடியாது, ஆட்டத்தின் போக்கு எந்த நேரத்தில் மாறும்,எந்த வீரர்கள் மாற்றுவார்கள் என்பது களச்சூழலைப் பொறுத்தது. ஆனால், பொதுப்பார்வையாக சூப்பர்-12 சுற்றில் வலுவான அணிகளுக்கு எதிராக இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதல் நிகழ்த்த உள்ளன.