200 மாணவர்களை விட குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை இன்று (21) திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும், இன்று மாணவர்களை அனுப்ப வேண்டாமென ஆசிரியர் சங்கங்கள் கோரியுள்ளன.
கொரோனா பரவலால் நீண்டகாலம் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீளத் திறக்கும் திட்டத்தின் கீழ், 200 ஐ விட குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை இன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பள முரண்பாடு சிக்கலை தீர்க்க நீண்டகாலமாக போராடி வரும் ஆசிரியர்கள், தமது போராட்டத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்து, கற்பித்தலிற்கு திரும்பவுள்ளனர். எனினும், அவர்கள் 25ஆம் திகதி முதலே கற்பித்தலை ஆரம்பிக்கவுள்ளனர்.
இன்று, பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆயினும், 23ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்கும் முடிவில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உறுதியாக உள்ளன. இன்று மாணவர்களை பாடசாலைகளிற்கு அனுப்ப வேண்டாமென அவர்கள் கேட்டுள்ளனர்.
காய்ச்சல், தடிமன், சளி போன்ற அடையாளங்கள் காணப்படும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.