மலேசியாவில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் பெரும் இழுபறியின் பின்னர் நேற்று முன்தினம் (16) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகள் இடம்பெற்றன.
பேருவளை, கல்ஹேன பகுதியை சேர்ந்த சத்துரிகா பிரியதர்ஷனி (32) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்திருந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மலேசிய பொலிசார் தெரிவித்தனர். எனினும், அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
30.12.2019 மலேசியாவிற்கு அழகு நிலையமொன்றிற்கு பணிக்காக சென்ற சத்துருகா, இரண்டு மாதங்களே அங்கு பணியாற்றினார். கொரோனா நிலவரத்தால் பணியிழந்த அவர், வேறு வேலைகள் செய்தார். இலங்கையர் ஒருவருடன் அறிமுகமாகி, துப்பரவு நிறுவனமொன்றில் பணியாற்றுவதாக தாயாருக்கு தொலைபேசியில் கூறியிருந்தார்.
2021 ஓகஸ்ட் 30ஆம் திகதியின் பின்னர் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதாகவும் தாயார் கூறுகிறார்.
எனினும், தனது மகளிற்கு தற்கொலை செய்யுமளவிற்கு தீவிரமான பிரச்சனைகள் இல்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்து வருகிறார்.
அவரது சடலத்தை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணத்தை திரட்ட பெற்றோரால் முடியாமல் போனதால் ஒன்றரை மாதங்கள் இழுபறியில் இருந்து, நேற்று முன்தினம் சடலம் நாட்டுக்குகொண்டு வரப்பட்டது.
நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்றது.
சடலத்தை சொந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியாது, நீர்கொழும்பிலேயே இறுதிச்சடங்கை மேற்கொள்ள வேண்டுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கெடுபிடி செய்ததாகவும், எனினும் மருத்துவதுறையினரின் தலையீட்டையடுத்து சடலத்தை சொந்த இடத்திற்கு கொண்டு சென்றதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.



