24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

இன்று ஆரம்பிக்கிறது ரி20 உலகக்கிண்ண திருவிழா!

16 அணிகள் பங்கேற்கும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பிக்கிறது.

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2007ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2016ஆம் ஆண்டில் நடந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கோப்பையை வென்றிருந்தது.

இன்று ஆரம்பிக்கும் 7வது ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுகிறது.

இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கிறது. மற்ற அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டுபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெறும்.

தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய 8அணிகளும், முதல் சுற்று ஆட்டங்களில் விளையாடும். முதல் சுற்று ஆட்டங்களே இன்று ஆரம்பிக்கின்றன. இலங்கையும் முதல் சுற்றில் ஆடுகிறது.

முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, ‘பி’ பிரிவில் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-1இல் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இரு முதல் சுற்று அணிகள், குரூப்-2இல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு நுழையும்.

இந்த கொரோனா காலத்தில் நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் இங்கு தான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்திருப்பதால் இங்குள்ள சீதோஷ்ண நிலைமையும், மைதானத்தின் தன்மையும் பெரும்பாலான வீரர்களுக்கு இப்போது அத்துப்படி. ஆக, ஐ.பி.எல். அனுபவம் நிச்சயம் அவர்களுக்கு அனுகூலமாக அமையும்.

20 ஓவர் கிரிக்கெட் என்றாலே ரன்வேட்டையைத் தான் ரசிகர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் மக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ, ஜோசன் ரோய் , லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து), ரோகித் சர்மா (இந்தியா), பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), டிவான் கான்வே, கப்தில் (நியூசிலாந்து) , குயின்டன் டி கொக் (தென்னாபிரிக்கா), கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன் (மேற்கிந்தியத் தீவுகள்) உள்ளிட்டோர் இந்த உலக கோப்பையில் கவனிக்கத்தக்க வீரர்களாக வலம் வருகின்றனர். முன்னணி அணிகள் போட்டிக்கு முன்பாக தங்களை மேலும் பட்டை தீட்டிக் கொள்ள சில பயிற்சி ஆட்டங்களிலும் விளையாட உள்ளன.

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலரும், 2வது இடத்தை பெறும் அணிக்கு 80,000 டொலரும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

இலங்கை, இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஓமன்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு பங்களாதேஷ் அணி, ஸ்கொட்லாந்தை எதிர்கொள்கிறது.

போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மாவையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது…’: பழைய நினைவுகளை மீட்ட விக்னேஸ்வரன்!

Pagetamil

தீயில் சங்கமித்தார் மாவை!

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

Leave a Comment