சென்னையில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் விசிக தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முதலிடம் வென்றவருக்கு ‘திருநங்கை ராணி’ மகுடம் சூட்டினார்.
தமிழகம் முழுவதும் திருநங்கைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகக் கடந்த எட்டு ஆண்டுகளாக சேவை செய்துவருகிறது ‘சாதிக்கப் பிறந்தவர்கள்’ சமூக அமைப்பு. திருநங்கைகள் மேம்பாட்டிற்காக வருடந்தோறும் தமிழக திருநங்கை ராணி என்னும் பட்டமளிப்பு விழாவை நடத்தி, இதன் மூலம் ஆண்டுதோறும் 15 திருநங்கைகளுக்கு அவர்கள் விரும்பும் உயர் கல்வி, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த ஆண்டு தமிழகத்தின் “திருநங்கை ராணி” என்னும் நிகழ்ச்சியை சென்னை, சின்மயா ஹெரிடேஜ் மையத்தில் அண்மையில் இந்த அமைப்பினர் நடத்தினர்.
இவ்விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விழாவில் கலந்துகொண்டு அவர் பேசும்போது, “சமூகத்தில் பாலினச் சமத்துவத்துக்காகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். திருநங்கைகள் எல்லாத் துறைகளிலும் தங்களின் முத்திரையைப் பதித்து வருகின்றனர். இதற்கு முன் அழகிப் போட்டி, ஃபேஷன் ராம்ப் வாக் போன்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் நான் பங்கெடுத்ததில்லை.
இப்படிப்பட்ட நிகழ்ச்சியைத் திருநங்கைகள் எப்படி முன்நின்று நடத்துகின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள வந்தேன். இங்கு வந்து பார்த்தவுடன்தான் அவர்களின் திறமை எனக்குத் தெரிந்தது. ஃபேஷன் துறையில் எத்தனை திருநங்கைகள் நேர்த்தியுடன் பல முயற்சிகளையும், பயிற்சிகளையும் பலகாலம் செய்து தங்களை இந்த நிகழ்ச்சிக்காகத் தயார்படுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது” என நெகிழ்ச்சியோடு பேசினார்.
அழகிப் போட்டி
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகிப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதினைந்து பேர் பங்கேற்றனர். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சாதனா முதலிடத்தையும், சென்னையைச் சேர்ந்த திருநங்கை சனா இரண்டாவது இடத்தையும், கோயம்புத்தூரைச் சேர்ந்த திருநங்கை ஸ்வேதா 3-வது இடத்தையும் பிடித்தனர். முதலிடம் பெற்ற திருநங்கை சாதனாவுக்கு திருமாவளவன் மகுடம் சூட்டிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சாதிக்கப் பிறந்தவர்கள் சமூக அமைப்பின் நிறுவனரான ஸ்வேதா பேசுகையில், “எங்கள் அமைப்பின் மூலமாகப் பயிற்சி பெற்ற 25 திருநங்கைகளுக்கு Legrand நிறுவனம் மூலம் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மூத்த திருநங்கைகளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இரு திருநங்கைகளுக்கு தலா 3000 ரூபாய் 3 மாத காலத்திற்கு வழங்கப்பட்டது” என்றார்.
வெற்றி பெற்ற திருநங்கைகளில் சென்னையைச் சேர்ந்த சனா பேசுகையில், ”மாடலிங் துறையில் என்னுடைய கவனத்தைச் செலுத்தப் போகிறேன். அதோடு அடுத்து இந்திய அளவில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் பங்கெடுக்க உள்ளேன்” என்றார்.
இன்னொரு வெற்றியாளரான ஸ்வேதா, “ஏற்கெனவே நான் அழகுப் பயிற்சி நிபுணருக்கான பயிற்சியை முடித்திருக்கிறேன். அந்தத் துறையிலும், அடுத்து நாமக்கல்லில் நடக்கவிருக்கும் அழகிப் போட்டியிலும் பங்கெடுக்க உள்ளேன்” என்றார்.