இந்தியாவில் உள்ள 2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் குழந்தைகளுக்காக அங்கீகரிக்கப்படும் இரண்டாவது COVID-19 தடுப்பூசி இதுவாகும்.
இது அங்கீகரிக்கப்பட்டால், குழந்தைகளிற்கு 28 நாள் இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்படும்.
இதற்கு முன் ஓகஸ்ட் மாதத்தில் ஜைடஸ் கெடிலா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 3 டோஸ்கள் கொண்ட ஜைகோவ்-டி மருந்துக்கு அனுமதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சீரம் நிறுவனம் தயாரித்துவரும் நோவாவேக்ஸ் மருந்தை 7 வயது முதல் 11 வயதுள்ள பிரிவினருக்கு பரிசோதித்துப் பார்க்க அந்த நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம் அனுமதி வழங்கியது.
2 வயது முதல் 18 வயதுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், புள்ளிவிவரங்கள், அறிக்கைகளை பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் வழங்கியது. இதுவரை இந்தியாவில் 96 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எய்ம்ஸ் மருத்துவமனையின் சமூக மருத்துவ மையத்தின் பேராசிரியர் சஞ்சய் கே ராய் கூறுகையில், “3 வகையான வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்சின் மருந்து பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. முதல் பிரிவு 12 முதல் 18 வயது, 2வது பிரிவு 6-12 வயது, 3வது பிரிவு 2-6 வயதுள்ளவர்களுக்குப் பரிசோதிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையில் மருந்து பாதுகாப்பானது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பது கண்டறியப்பட்டது” எனத் தெரிவித்தார்.