புதிய சட்டங்களை நிறைவேற்றாமல், எந்தவொரு முறையிலும் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாதென அமைச்சர் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (08) இடம்பெற்ற, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டங்களை நிறைவேற்றாமல், ஏதேனுமொரு வகையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாதென சட்ட மாஅதிபர் அறிவித்துள்ளதாக, தேர்தல்கள் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற விசேட குழுக் கூட்டத்தில், அக்குழுவின் தலைவர் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட காலமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் செயல்பட்டு வரும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், சட்ட நிலைமை தடையாக இருப்பதை அமைச்சர் தினேஷ் குணவர்தன அதன் உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்பது மாகாண சபைகளினதும் பதவிக்காலம் முடிந்து 3 வருடங்களாகின்றதோடு, அனைத்து மாகாண சபைகளும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
எனவே மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துவது தொடர்பான பரிந்துரையை வழங்குமாறு சட்ட மாஅதிபரிடம், தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விசேட செயற்குழு அண்மையில் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது