இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக, கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலைதீவு அருகே அமெரிக்க கடற்படையினரிடம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழா்அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி இலங்கைத் தமிழா் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவிற்கு பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இவா்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக, மாலைதீவு மற்றும் மோரீஷஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் பயணிக்க முடியாத நிலைமைக்குள்ளானது.
மாலைதீவு அருகே உள்ள டிக்கோ காா்சியா என்ற தீவு அமெரிக்காவின் வசம் உள்ளது. இந்தத் தீவில் அத்துமீறி இவா்களின் படகு நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இந்தியத் தூதரகத்துக்கு இது குறித்து எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து 64 அகதிகள் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்ப முயன்றதாக வந்த தகவலையடுத்து க்யூ பிரிவு போலீஸாா் தென் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தி உள்ளனா். ஆனால், தற்போது வரை இந்த 64 போ் யாா் என்பதை உளவுத்துறை போலீஸாரால் உறுதி செய்ய முடியவில்லை.
அதேநேரத்தில் கடற்பரப்பில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படும் 64 நபா்களின் விவரங்களைப் பெறுவதற்காக தமிழக காவல்துறை சா்வதேச பொலிஸாா் உதவியை நாடி இருக்கிறது.