சிங்கள பாடகி யொஹானி டி சில்வாவின் தந்தை பிரசன்ன சில்வா, மாவிலாற்றை கைப்பற்றி பிரபாகரனிற்கு முதலாவது பாடத்தை கற்பித்ததாக முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடலின் மூலம் திடீரென புகழடைந்த சிங்கள பாடகி யொஹானி டி சில்வாவின் தந்தை பிரசன்ன டி சில்வா, இலங்கை இராணுவத்தின் உயதிகாரியாவார். மேஜர் ஜெனரல் தரத்தில் ஓய்வுபெற்றார்.
முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, யொஹானிக்கு பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்தில் யொஹானியின் தந்தை பிரசன்ன டி சில்வா பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
“உங்கள் தந்தை பிரசன்ன டி சில்வாவை, மாவிலாற்றை மீட்பதற்காக வவுனியாவிலிருந்து கல்லாறிற்கு அழைத்தேன்.
அந்த கட்டளையை தொடர்ந்து, விசேட படையணியுடன், பீரங்கி, விமானப்படையின் உதவியுடன் 2006 ஓகஸ்ட் 10ஆம் திகதி மாவிலாற்றை உங்கள் தந்தை விடுவித்தார். நீரை ஒரு போர்க்காரணியாக புலிப் பயங்கரவாதிகள் பாவித்தார்கள். மனிதாபிமான காரணங்களை போர்க்காரணிகளாக மாற்றக்கூடாது என்ற முதலாவது பாடம் பிரபாகரனிற்கு கற்பிக்கப்பட்டது.
மாவிலாறுக்கு பின்னர் கேணல் பிரசன்ன டி சில்வா, சம்பூர், வாகரை, கதிரவெளி, வெருகல் உட்பட கிழக்கு மாகாணத்தில் திருமலை முதல் மட்டக்களப்பு வரையிலான அனைத்து நடவடிக்கைகளிலும் சிறப்புப் படைகளை வழிநடத்தினார். கிழக்கு நடவடிக்கையின் போது தொப்பிக்கல நடவடிக்கையில் மட்டும் உங்கள் தந்தைக்கு சிறிது ஓய்வு கொடுத்தேன்.
இறுதிப் போரில் 55 மற்றும் 59 வது படையணி தளபதியாக தந்திரோபாயத்திற்கான வீரம் மற்றும் தலைமையை வழங்கினார் என குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா, அசை மேடையில் புகழடைந்து தந்தையை போல தாய்நாட்டிற்கு புகழ் சேர்க்க வேண்டுமென வாழ்த்தியுள்ளார்.